மறைவழிப் பட்ட பழிமொழி தெய்வம் பறையறைந்தாங்கு ஓடிப் பரக்கும் - நீதிநெறி விளக்கம் 95
நேரிசை வெண்பா
மறைவழிப் பட்ட பழிமொழி தெய்வம்
பறையறைந்தாங்(கு) ஓடிப் பரக்கும் - கழிமுடைப்
புன்புலால் நாற்றம் புறம்பொதிந்து மூடினுஞ்
சென்றுதைக்கும் சேயார் முகத்து 95
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
இழிவான இறைச்சியின் மிகுந்த கெட்ட நாற்றமானது அவ்விறைச்சியை ஒன்றிற் போட்டுப் பொதிந்து மூடிவைத்தாலும் வெகுதூரத்திலிருப்பவர்களுடைய முகத்திலும் போய்த்தாக்கும்; அதுபோல, மறைவில் நடந்த செயலால் வரும் பழிச் சொற்கள் இறைவன் பறை கொட்டி வெளிப்படுத்தினாற்போல் விரைந்து சென்று எங்கும் பரந்துவிடும்.
விளக்கம்:
சென்றுதைக்கும் என்பதைச் சென்று உதைக்கும் என்றும் பிரிக்கலாம்
கருத்து: மறைவில் நடந்திருப்பினும் பழிச்செயல்கள் விரைவில் வெளிப்படும்.