சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே நட்டார் எனப்படு வார் – நாலடியார் 208
இன்னிசை வெண்பா
முட்டிகை போல முனியாது வைகலுங்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப்படு வார் 208
- சுற்றந்தழால், நாலடியார்
பொருளுரை:
கம்மாளரின் சம்மட்டி போல் நாடோறும் வெறுத்தலில்லாமல் தம்மை இடித்திடித்து வயிறு பிழைப்பாரும் நேரத்திற் குறடு போற் கைவிட்டு விடுவர்; ஆனால் உறவானவரெனப் படுவோர் அங்ஙனம் நேரத்திற் கைவிடாமல் உலையாணிக்கோல் போல் தம்முடன் எரியும் புகுந்து உடன் துன்புறுவர்.
கருத்து:
உறவினர் உற்ற நேரத்திற் கைவிடாதவராதலின் அவரைத் தாமும் என்றுந் தழுவி நிற்றல் வேண்டும்.
விளக்கம்:
முட்டிகைபோல என்றார், பிறரை இச்சகத்தால் வருத்தி இடித்துண்ணுதலின். கொட்டி என முட்டிகையின் வினையினாலேயே கூறப்பட்டது. உண்ணுதலென்பது, வயிறுபிழைக்கைக்கு வந்தது.
உலைக்கூடத்தில் இரும்பு முதலிய பொருள்களைத் தீயில் இடும்போது குறடு அதனைவிட்டுவிடும்; உலையாணியென்னுஞ் சுட்டுக்கோல் உடன்புகும்.
ஆதலின், கைவிடுவோர்க்கும் கைவிடாதோர்க்கும் முறையே அவை இரண்டும் உவமமாக வந்தன. கம்மாளர் கருவிகளே செய்யுளில் ஒரு சேர உவமமாக வந்தமை நயமுடைத்து.

