நட்டார்க்கு நட்டார் மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ – நாலடியார் 209
நேரிசை வெண்பா
நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ! - இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால் 209
- சுற்றந்தழால், நாலடியார்
பொருளுரை:
சிறந்த மலர்களாற் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை யணிந்த மாதே! இறக்கும் வரையிலும் தம் உறவினர் இன்புறுவன தாமும் இன்புற்று எழுச்சியோடிருந்து அவரோடு துன்புறுவன துன்புறாவிடின், உறவினர்க்கு உறவினர் மறுமையிலும் செய்வதொரு நன்மை உண்டோ?
கருத்து:
சுற்றந் தழுவுதலால் துன்பம் வரினும் அதுவே செய்யத்தக்கது.
விளக்கம்:
அவரோடு துன்புறாக்கால் மறுமையுஞ் செய்வதொன்றுண்டோ வென்க.
எழீஇயென்றார். கிளர்ச்சியோடு தொடர்ந் தென்னும் பொருட்டு,