தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை – நாலடியார் 210

நேரிசை வெண்பா

விருப்பிலார் இல்லத்து வேறிருந்(து) உண்ணும்
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்; - விருப்புடைத்
தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போ(டு) இயைந்த அமிழ்து. 210

- சுற்றந்தழால், நாலடியார்

பொருளுரை:

அன்பில்லாதவர் வீட்டில் தனியே இருந்து உண்ணுகின்ற பூனைக்கண் போன்ற ஒளிமிக்க சூடான பொறிக்கறி உணவும் வேப்பங்காய் போல வெறுப்புத் தரும்;

அன்புடைய தன்னொத்தார் வீட்டில் உண்ணுகின்ற விளங்கும் நீரையுடைய குளிர்ந்த புல்லரிசிக் கஞ்சியும் உடம்போடு பொருந்திய அமிழ்தமாகும்.

கருத்து:

சுற்றத்தாரிற் சிலர் எளிய நிலையினரேனும், அவர் அன்புடையவராகலின் அவர் தழுவுதற்குரியர்.

விளக்கம்:

‘வெருகு' உயிர்த்தொடர் மொழியாதலின் வல்லெழுத்து இரட்டிற்று. 1உடனிருத்தி உணவிடாமையின் "வேறிருந்து" எனப்பட்டது.

தன் போல்வாரென்றார், தன்னை மதிப்பாரென்னும் பொருட்டு.

நீர்க்குத் ‘தயங்கும் என்னும் அடை, புல்லரிசிதானும் போதியதின்றி வெறும் நீருணவாய் விளங்குதலையும், புற்கைக்குத் ‘தண்' என்னும் அடை, அக்கஞ்சி தானுஞ் சூடின்றி ஆறியிருத்தலையுங் குறிப்பானுணர்த்தும்.

என்பு: ஆகுபெயராய் உடம்புக்காயிற்று. எளிய உணவாயினும் அன்பென்னும் அமிழ்தோடு கூடியதாகலின் அதுவே உடம்புக்கு ஊட்டந் தருமென்றற்கு ‘என்போடியைந்த அமிழ்து' என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Apr-22, 7:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

சிறந்த கட்டுரைகள்

மேலே