தீண்டாதே தீயவை நூல் மதிப்புரை முனைவர் நசெகிசங்கீத்ராதா நூலாசிரியர் கவிஞர் இராஇரவி

தீண்டாதே தீயவை"!
நூல் மதிப்புரை:
முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா !
நூலாசிரியர்:
கவிஞர் இரா.இரவி !

வானதி பதிப்பகம்.23.தீனதயாளு தெரு,தியாகராயர் நகர்,சென்னை.6000017.பக்கங்கள் 60.விலை ரூபாய் 50.பேச 044.24342810.


எட்டயபுரத்து கவிஞனின் மரபினில் தவழ்ந்து, புரட்சிக் கவிஞனின் வழியில் நடை பயின்று, பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சிபெற்று இன்று 'ஹைக்கூ' கவிதை உலகின் முடிசூடா மன்னனாக, சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 'ஹைக்கூ' கவிதை உலகின் 'ஹைலைட்டாக'த் திகழ்பவர் கவிஞர் இரா இரவி அவர்கள்.
தகைசால் பேராசிரியர் 'தமிழ்த்தேனீ' இரா மோகன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று இலக்கிய உலகில் அளப்பரிய செயல்களைச் செய்து கொண்டிருப்பவர் கவிஞர். பேராசிரியர் இரா மோகன் அவர்கள் கவிஞரைக் குறிப்பிடுகையில், 'முற்போக்குச் சிந்தனையின் வல்லினம்' என்றே பாராட்டுகிறார். 'முடியாது' என்பது கவிஞர் அகராதியில் கிடையாது. என்பதனால்தான் முதுமுனைவர் உயர்திரு இறையன்பு (இ.ஆ.ப.) அவர்கள் கவிஞரைப் 'புலிப்பால் ரவி' என்றே குறிப்பிடுகிறார். இத்தகைய சிறப்புக்குரிய கவிஞர் ரவி அவர்களின் 25ஆவது நூல் 'தீண்டாதே தீயவை'.
இந்நூலின் அட்டைப்படத்தில் தீயவற்றின் படங்களை சிவப்பு வண்ணத்தில் அடையாளப்படுத்தியுள்ளனர். பின்பகுதியில் இருளும் சூழ்ந்துள்ளது. தீயவற்றைத் தீண்டினால் இருளில் தள்ளப்படுவாய் என்பதன் குறியீடாக அட்டைப்படம் அமைந்துள்ளது அருமை.
இந் நூலிற்கான அணிந்துரையினை 'கவிதை உறவு' இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கியுள்ளார். அதில்,
"புகையிலை வளையம் உனக்கான மலர்வளையம் சிகரெட்"
என்ற கவிஞரின் வரிகளை ஒவ்வொரு சிகரெட் பாக்கெட்டிலும் அச்சிட வேண்டும் என்கிறார் ஏர்வாடியார்.
மற்றொரு அணிந்துரையை கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் வழங்கியுள்ளார். "குடிப்பது நாகரீகம் மடையன் சொன்னது குடிப்பது அநாகரீகம் நான் சொல்கிறேன்" என்ற கவிஞரின் வரிகளைக் குறிப்பிட்டு 'விடியலுக்கு ஓர் விளக்கு' என்று கவிஞரைப் பாராட்டுகிறார். அதேசமயம் கவிஞர் தமது உரையில் (என் உரையில்) "கள்ளச்சாராயம் வந்து விடும் என்பதற்காக, அரசாங்கமே நல்ல சாராயம் விற்பது முறை அன்று. சாராயம் என்றால் கெட்டதுதான் அதில் என்ன நல்ல சாராயம் என்று எதுவுமில்லை என்கிறார். சமூகத்தின் மீதான அக்கறையின் ஆழத்தைக் கவிஞரின் வரிகளில் காணமுடிகின்றது. (மது புகையிலை சூதாட்டம்) போன்ற தீயவற்றை இந்நூலில் பத்துத் தலைப்புகளில் படிப்போர் நெஞ்சம் பதைக்கும் வகையில் பகுத்து, தேர்ந்து தெளிவுபடுத்தியுள்ளார் கவிஞர்.
'தீண்டாதே என்றும் மது' என்ற முதல் தலைப்பிலேயே 'என்றும்' என்று ஒரு அழுத்தத்தைச் சேர்க்கிறார் கவிஞர்.
"சினம் கூட்டிவிடும் மது சிந்தையை சீரழிக்கும் மது"
" தரத்தை போக்கிவிடும் மது. தன்மானம் இழக்க வைக்கும் மது"
"தீங்கினும் தீங்கு மது தீண்டாதே என்றும் மது".
என்பதில், ஒருவன் மது அருந்தினால் சிந்திக்கும் திறன் அழிந்து அவனது தரம் அழிந்து, தன்மானமும் அழிந்துவிடும். என்பதை அருமையாகப் புலப்படுத்தி உள்ளார் கவிஞர். நிறைவாக 'தீண்டாதே என்றும் மது' என்ற தலைப்பைக்கொண்டே கவிதையை நிறைவு செய்துள்ளார் கவிஞர். இவ்வரிகளில் கவிஞரைப் போலவே அவரது கவிதைகளிலும் மோனை முன் வந்து நின்று நம்மை முறுவல் அடையச் செய்கின்றது.
'அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்துவாய்'
என்ற தலைப்பின் கீழ் "பீரில் ஆரம்பித்து பிராந்தியில் முடிக்கிறாய் வாந்தி எடுத்து அவமானப்பட்டு தவிக்கிறாய்" என்று குடிமகன்கள் படும் அவஸ்தையை அவமானத்தை எதார்த்தமாய் விளக்கியுள்ளார் இந்த 'குறும்பா' கவிஞர் . 'நட்பு' பற்றிய கவிதைகள் நிறைய உண்டு. ஆனால் கவிஞர் குடிகார நண்பனின் நட்பை எப்படி எழுதியுள்ளார் என்று பாருங்கள்! "குடிக்கும் நண்பனைத் திருத்துவது தான் நட்பு. கூடக் குடித்து கும்மாளமிடுவது தப்பு "
இதில் ஒரு சிறு குறிப்பினையும் உள்ளீடாக வைக்கிறார் கவிஞர். குடிகாரர்களிடம் நட்பு கொள்வதே தப்பு என்பது தான் அது.
'புகையிலை பழக்கம் ஒழிப்போம்' என்ற தலைப்பின் கீழ் "புகை பிடிக்கும் பழக்கம் உயிர்கொல்லி தனக்குத்தானே வைக்கும் சுய கொள்ளி" என்கிறார் கவிஞர். உயிர்கொல்லி அனைவரும் அறிந்ததே. இந்த உயிர்கொல்லி யைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் சுய கொள்ளி வைத்துக் கொள்கிறான் தனக்கு என்கிறார் கவிஞர். கொல்லி- கொள்ளி என்று சொற்களில் விளையாடும் சொல்விளையாட்டுக் கவிஞராகவும் நமக்கு காட்சியளிக்கிறார்.
'சூதாட்டத்திற்கு இரையாகதே' என்ற தலைப்பில் எப்பேற்பட்டவரையும் சூதாட்டம் விழுங்கி விடும் என்பதற்காகத்தான் 'இரை' என்ற சொல்லாடலை சூட்சுமமாகக் கையாண்டுள்ளார் கவிஞர். "விளம்பரம் செய்து மூளையை திருடுவார்கள் வீணாக உன்னை பின்னால் வீழ்த்துவார்கள்"
என்பதில் எதை இழந்தாலும் பெற்றுக்கொள்ளலாம். மூளையைத் திருடி விட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. சிந்தனையற்று சிதைந்து போய் விடுவோம். என்பதைக் குறும்பாவில் கூர்மைப் படுத்துகிறார் கவிஞர்.
'குடல் வெந்து சாகாதே' என்ற தலைப்பின் கீழ் "பிராந்தி இல்லை பீர் மட்டும்தான் குடி என்பார்கள் பிராந்தி பீர் எல்லாம் குடியின் கேடுதான் அறிந்திடு"
இதற்கு கவிஞர் கூறும் உவமை தான் முறுவலை முகத்தில் தோற்றுவிக்கின்றது. கழுதை விட்டையில் முன்பின் வேறுபாடு இல்லை. குடியில் நல்ல குடி இல்லை எல்லாம் கெட்ட குடிதான் என்கிறார் கவிஞர்.
"என்றாவது என்றால் தப்பில்லை என்பார்கள் என்றுமே எனக்கு வேண்டாம் என உறுதியாய் இரு"
இளைய சமுதாயம் சீரழிந்து போய் விடக்கூடாது என்ற கவிஞரின் உள்ளப் பாடுதான் இக்கவிதையில் உறுதிப்பாடாக ஒலிக்கின்றது.
'தீண்டாதே தீயவை' என்ற தலைப்பின் கீழ்
"மிதப்பதாக நினைத்து மூழ்கிவிடுகின்றனர் போதையில்"
என்ற கவிதையில் (மிதத்தல்- மூழ்குதல்), என்ற முரண்பாட்டை எடுத்துக்கொண்டு மது சமூகத்திற்கு முரண்பாடு என்று ரைக்கிறார் கவிஞர்.
"கணவரின் குடியால் பெருகியது மணவிலக்கு தேவை மதுவிலக்கு"
என்பதை மதுவிலக்கு இல்லை என்பதால் மணவிலக்கு உண்டாயிற்று என்று முரணைத் தோற்றுவிக்கிறார் கவிஞர். அதேபோல், "இன்பத்தைக் கொண்டாட துன்பம் எதற்கடா மது" (இன்பம் -துன்பம்) புரட்சிக்கவிஞரின் கவிதைகளில் நடைபயின்றவர் என்பதால் புரட்சிக்கவிஞரின் பழக்கம் நம் குறும்பாக் கவிஞருக்கும் தொற்றிக் கொள்வது உண்மைதானே! அடா! தடா என்ற வார்த்தைகளை வீசுவதே கவிதைக்கோர் அழகு!
"இரண்டு எழுத்து எதிரி ஆக்கிவிடும் ஒரு மாதிரி
மது "
"கேளிக்கை என்று தொடங்கி வாடிக்கையாகி விடும் மது"
என்பதில், (எதிரி- மாதிரி கேளிக்கை - வாடிக்கை) என்ற சொற்களின் இசை வால் சொற் சித்திரமும்(கவிதை) படிப்போருக்கு இசையாகின்றது .
'மதுக்கடை' என்ற தலைப்பின் கீழ் "பாதை தவறியவர்கள் போதை வாங்குமிடம் மதுக்கடை"
" வருங்கால தூண்கள் வழுக்கி விழும் இடம் மதுக்கடை"
என்பதில் இளைஞர்களின் பொழுது ஆக்குவதற்குப் பயன்பட வேண்டுமே ஒழிய போக்குவதற்குப் பயன்படக் கூடாது என்று வலியுறுத்துகிறார் கவிஞர்.
"விதவைகளின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யுமிடம் மதுக்கடை"
என்பதில், பொதுவாக விரிவாக்கம் என்பது மகிழ்ச்சியே! எப்பொழுது எனில் அது நல்லவையாக இருக்கும் பட்சத்தில் விதவையின் விரிவாக்கம் சமூகத்தைச் சுருங்க செய்வது மட்டுமல்ல புழுங்கச் செய்கின்றது.
'சிகரெட்' என்ற தலைப்பின் கீழ் "நடிகரை பார்த்து புகைக்காதே உன்னை நீயே புதைக்காதே சிகரெட்"
என்பதில் இன்றைய இளைய சமுதாயம் திரைப்பிம்பங்களைப் பார்த்து திசை தெரியாது பயணிப்பதைக் குறிப்பிடுகிறார். காகிதப்பூக்களின் கவர்ச்சியில் தடம்மாறி மட்டுமல்ல தடுமாறிக் கொண்டிருப்பதையும் தரணிக்கு எடுத்துரைக்கிறார் கவிஞர்.
(புதைக்காதே- புகைக்காதே) என்ற ஓர் எழுத்து வேறுபாட்டில் உன்னதக் கருத்தை உரத்துக் கூறுகிறார் கவிஞர். எத்தகைய மனிதர்களையும் ஒரு சில அசைவுகள் அதிர்வுகளுக்குள்ளாக்கிவிடும் பேசும் 'சொற்சித்திரம்' கவிதை! எத்தனையோ கவிதைகள்! எவ்வளவோ கவிஞர்கள் படித்திருந்தாலும் குறுகத் தரித்த வரியில் ஆயிரமாயிரம் செய்திகளை அள்ளித் தெளித்துக் கரும்பாக நமக்குத் தருகிறார் இந்தக் 'குறும்பா' கவிஞர் இரா.இரவி அவர்கள்.
'தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்' என்ற வள்ளுவரின் வரிகள்தான் கவிஞரின் கவிதைகளில் முற்றிலும் எதிரொலிக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
கவிஞரின் கூற்றுப்படி 'இந்த நூல் படித்து முடித்த ஒருவர் மதுவை விட்டு ஒழித்தாலும் ஒருவர் புகை பிடிப்பதை விட்டு ஒழித்தாலும் அதுவே இந்நூலிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (30-Apr-22, 9:12 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 46

மேலே