மண்ணாளும் வேந்தர்க்கு உறுப்பு மூன்று - திரிகடுகம் 100
நேரிசை வெண்பா
பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் - வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு. 100
- திரிகடுகம்
பொருளுரை:
தம்மேல் அன்பு நிறைந்த சேனையும், பகைவர் பலர்கூடி எதிர்ப்பினும் எவ்வளவும் பயப்பட வேண்டாத மதிலரணும் வைக்கப்பட்டு, நிறைந்துள்ள எண்ணுவதற்கிலாத ஏராளமான முற்றுப் பெறாத சிறப்பான பொருள் சேமிப்பும் ஆகிய இம்மூன்றும் பூமியை ஆளுகின்ற அரசர்க்கு உறுப்புக்களாகும்.
கருத்துரை:
படையும், மதிலரணும், மிக்க செல்வமும் நன்கமையப் பெற்றுள்ள அரசனே சிறந்தவன் ஆகும்.
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆகிய ஆறும் அரசர்க்கு உறுப்பென்று வள்ளுவர் கூறியிருக்க, இவர் படை அரண் செல்வம் ஆகிய மூன்றை மட்டும் குறித்தது,
அமைச்சையும் நட்பையும் படையுள்ளும், நாட்டை அரணுள்ளும் அடக்கியதனால் ஆகும்.
எயிலரண் என்றது மற்றை மலை நீர் காடு அரண்களையும் கருதியதாம்.