பொருவறு தன்மைகண் டஃதொழிந்தார் அஃதால் உருவு திருவூட்டு மாறு - பழமொழி நானூறு 106
நேரிசை வெண்பா
வாட்டிற லானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
வீட்டிய சென்றார் விளங்கொளி - காட்டப்
பொருவறு தன்மைகண் டஃதொழிந்தார் அஃதால்
உருவு திருவூட்டு மாறு. 106
- பழமொழி நானூறு
பொருளுரை:
முன்னொரு காலத்தில் நாந்தகம் என்னும் வாளினை உடைய மிக்க திறல் பொருந்திய திருமாலை, கொல்லும் பொருட்டுச் சென்ற மதுகைடவர் என்போர் வளைந்து சூழ்ந்தார்களாகி நிலைபெற்று விளங்குகின்ற தனது திருமேனியின் ஒளியைக்காட்ட ஒப்பில்லாத வடிவின் தன்மையைக் கண்டு தாங்கொண்ட மாறுபாட்டினின்றும் நீங்கினார்கள்; அழகிய வடிவே செல்வத்தை ஊட்டும் நெறி அதுவன்றோ?
கருத்து:
உருவப் பொலிவால் பகைவர் வயமாவர் என்றது இது.
விளக்கம்:
உருவப் பொலிவால் பகைவர் வயமாவர் என்பது பயப்ப வேறொரு பொருள் தந்து கூறலின், பிறிது மொழிதலாம். உருவு திரு வூட்டுதலாவது, கண்ட அளவிலேயே வெருண்டு மாறுகோடலை ஒழிதலான், தமது செல்வத்தை இடை யூறின்றித் துய்த்தலாம். வளைத்தார்கள்: வளைத்தார்களாகிக் காட்டக்கண்டு ஒழிந்தார் எனக் கூட்டுக.
'உருவு திருவூட்டு மாறு' என்பது பழமொழி.