பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார் கற்றாரும் பற்றி இறுகுபவால் - பழமொழி நானூறு 107
நேரிசை வெண்பா
பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார்
கற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா
வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர!
மரங்குறைப்ப மண்ணா மயிர். 107
- பழமொழி நானூறு
பொருளுரை:
கன்றினை உடைய பசு வரம்பின்கண் உள்ள பூவினை உண்கின்ற வளமையுடைய புனல் நாடனே!
மரங்களை வெட்டும் வாள் முதலிய கருவிகள் மயிரினை நீக்குதல் செய்யாது; ஆனால், பழைய நூல்களின் துணிவைக் கற்றாரும் செல்வத்தை ஒருகாற் பெற்றாலும் வேண்டுவார்க்கு ஒன்றைக் கொடுத்தலும் இலர், தாமுந் துய்த்தலுமிலராகி, பற்றுள்ளம் உடையவராய் நெகிழாது இறுகப்பிடிப்பர்; இஃது எப்படி என்று வினவப்படுகிறது.
கருத்து:
கற்றவர்கள் ஈதலும் துய்த்தலுமின்றி பொருட்களை இறுகப் பிடித்தல் அடாத செய்கையாம்.
விளக்கம்:
மரம் குறைக்கின்ற கருவிகள் மயிரினை நீக்குதல் செய்யாது. அதுபோல இறுகப் பிடிக்கும் கல்லாதார் ஈதல் துய்த்தல் முதலியன செய்யார். இது பொருந்தும்.
செல்வத்தாற் பெறும் பயன் ஈதலும் துய்த்தலுமே என்று ஐயந்திரிபின்றிக் கற்றார் ஈதல் துய்த்தல் முதலியன செய்யாது இறுகப் பிடித்து வாழ்வது அடாத தென்பது.
இது மரங்குறைப்பதற்காக ஏற்பட்ட கருவி மரங்குறையாது ஒழிதல் போலும். பெற்றாலும் என்றது கற்றார் பெறுதற்கரியது செல்வம் என நடைமுறையில் விளக்கப்பட்டது.
'மரங் குறைப்ப மண்ணா மயிர்' என்பது பழமொழி.