இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும் நடுக்கமும் நன்மகிழ்வு மில் – அறநெறிச்சாரம் 105
நேரிசை வெண்பா
கல்லான் கடைசிதையும் காமுகன் கண்காணான்
புல்லான் பொருள்பெறலே பொச்சாக்கும் - நல்லான்
இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும்
நடுக்கமும் நன்மகிழ்வு மில் 105
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
கல்லாதவன் கடையனாய் அழிவான், காமுற்ற ஒருவன் கண் தெரியாதவனாவான்,
அற்பன் பொருள் பெற்ற அளவிலேயே தன் நிலையை மறந்து ஒழுகுவான்,
அறிவுடையவன் இடுக்கணும் இன்பமும் எய்தியக்கண்ணும் துன்பமுற்றவிடத்து வருந்துதலும் இன்பமுற்றவிடத்து மகிழ்தலும் இலனாவன்.
குறிப்பு:
காமுகன் கண்காணானாதலாவது காம மயக்கத்தால் தான் சேர்தற்குரிய மகளிர் இவரெனவும் சேரத் தகாதார் இவரெனவும் அறியானாய் ஒழுகுதல்.
''காமத்துக்குக் கண்ணில்லை'' என்பது பழமொழி. அன்றி, அக் கெட்ட வொழுக்கத்தால் உடனிலை கெட்டுக் கண்பார்வையினை இழப்பான் எனலுமாம்.
கடை- கடையன்; இழிந்தவன்: குணவாகுபெயர்.