வானம் காணலாம் வாரீர்

#வானம் காணலாம் வாரீர்..!

எத்தனை எத்தனை வண்ணங்கள் வானத்தில்
எடுத்துக் கொட்டுவ தெவரோ..?
புத்தம் புதியன போலவே என்றும்
பூசும் கலைஞன் யாரோ..?

அந்தி வானம் ஆரஞ்சு வண்ணம்
அழகாய்ப் பூசிக் கொள்ளும்
மந்திர வானில் கதிரவன் மறைவு
மங்கிய ஒளியைத் தள்ளும்..!

மங்கிக் கிடந்த வெள்ளி நிலவு
மலர்ந்து புன்னகை பூக்கும்
அங்கும் இங்கும் குளிரை வீசி
அந்தி யணலைத் தாக்கும்..!

முகிலின் கூட்டம் முந்தானை விரித்து
முல்லை நிலவைப் போர்த்தும்
திகைத்த நிலவு
முகிலில் பிதுங்கி
முத்துப் பற்களைக் காட்டும்..!

கவிஞர் நினைவில் புகுந்து கலந்து
கற்பனை வளர்த்து பார்க்கும்
கவிதை புணைய வைத்து நிலவு
காதலி யாகு மவர்க்கும்..!

விண்மீன் கூட்டம் மின்மினி காட்டி
விட்டு விட்டு மினுக்கும்
கண்கள் இதனைக் கண்டு கொஞ்சி
கவிதை பலவும் கோக்கும்..!

எத்தனை யழகு பரந்த வானம்
இருள்பகல் விளைச்சலில் அழகாய்
வித்தைகள் நாளும் வானத் திரையில்
வியந்து களித்து மகிழ்வாய்..!

சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (16-Jul-25, 10:02 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 46

மேலே