கானீனன் கூடன் கிரிதன் பௌநற்பவன் பேர் - ஏலாதி 30

நேரிசை வெண்பா

மாண்டவர் மாண்ட வறிவினான் மக்களைப்
பூண்டவர்ப் போற்றிப் புரக்குங்கால் - பூண்ட
ஒளரதனே கேத்திரசன் கானீனன் கூடன்
கிரிதன் பௌநற்பவன் பேர்! 30.

- ஏலாதி

பொருளுரை:

சான்றோர் தமது சிறந்த அறிவினால் தம் மக்களைக் காத்தல் மேற்கொண்டு அவர்களை விரும்பி வளர்க்குங்கால் ஒளரதனும், கேத்திரசனும், கானீனனும், கூடோத்து பன்னனும், கிரிதனும் பௌநற்பவனும் என்பன அம்மக்கள் பெறும் பேராகும்.

பொழிப்புரை:

மாட்சிமைப்பட்ட அறிவுடையார், மாட்சிமைப்பட்ட தம் அறிவினாற் புதல்வரைப் பொருந்தியவகை யுரைக்குமிடத்து,

தனக்குப் பிறந்தவ னுரதனென்றும், தன்னேவலாலாதல், தானிறந்ததற் பின்பு குருக்களாலாதல் தன் மனையாள் வயிற்றே பிறனொருவற்குப் பிறந்தவனைக் கேத்திரச னென்றும்,

தீவேட்டு மணம்புரியுமுன் தாய் வீட்டிற் பெற்ற பிள்ளையைக் கானீனனென்றும்,

மணம் புரிந்தபின் கணவன் வீட்டில் அவனுக்கொளித்துப் பிறனொருவனிடத்துப் பெற்ற பிள்ளையைக் கூடனென்றும்,

கணவனிறந்த பின்னர் வேறொருவனுக்குத் தான் மனையாளா யவனொடு பெற்ற பிள்ளையைப் பௌநர்ப்பவனென்றும் கூறுப!.

கருத்து: மக்கள் ஒளரதன் முதலாகப் பலவகைப்படுவர்.

ஒளரதன், கணவனுக்குப் பிறந்தவன்;

கேத்திரசன், கணவனிருக்கையிற் பிறனுக்குப் பிறந்தவன்;

கானீனன், திருமணமாகாதவட்குப் பிறந்தவன்;

கூடோத்துபன்னன், களவிற் பிறந்தவன்;

கிரீதன், விலைக்கு வாங்கப்பட்டவன்;

பௌநற்பவன், கணவனிறந்தபின் அவன் மனைவி இரண்டாம் முறையாய்ப் பிறனை மணஞ் செய்து கொண்டு பெற்ற மகன்.மாண்டவர்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Nov-24, 1:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே