சேத்திரத் திருவெண்பா - பாடல் 18 - திருமழபாடி

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

நேரிசை வெண்பா

இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவிவிடா முன்னம் - மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை. 18

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, '’இவர் இறந்துவிட்டார் என்று உறவினர்கள் இழவுதனை விழாவாகக் கொண்டாடும்படி உயிரை விடுவதற்கு முன்பாக’ மழபாடியில் உறையும் ஆண்டவனாகிய சிவபெருமானை நெஞ்சினில் நினைத்துக் கொள்வாயாக ’ என்று கூறுகிறது.

பொழிப்புரை:

உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ’இவர் இறந்துவிட்டார் என்று இழவுதனை விழாவாகக் கொண்டாடும்படி உயிரை விடுவதற்கு முன்பாக’

மழபாடியில் உறையும் ஆண்டவனாகிய சிவபெருமானை, அரிய அமுதம் போன்றவனை, முன்பு பிரமனும், திருமாலும் இறைவனாகிய சிவபெருமானின் திருவடியையும், தலையையும் காணமுடியாதபடி உயர்ந்து நீண்டவனை நெஞ்சினில் நினைத்துக் கொள்வாயாக என்று கூறுகிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

குறிப்புரை:

இழவு ஆடுதல் - இழவு கொண்டாடுதல். விழவு ஆடுதல் - விழாக் கொண்டாடுதல். விழா, பிண விழா.

மழபாடி, சோழநாட்டுத் தலம்.

திருமழபாடி, திருவையாற்றிலிருந்து 5 கிலோ மீட்டர் வடமேற்கில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம்; திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாகவும் செல்லலாம்.

அரியலூர் மாவட்டம் திருமழபாடி என்ற ஊரில் அமைந்துள்ள வைத்தியநாதர் கோயில் ஒரு சிவன் கோயில் ஆகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றது.

இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதசுவாமி, தாயார் சுந்தராம்பிகை.

இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை புருடா என்னும் மிருகம் பிரம்ம உலகத்தில் இருந்து எடுத்து வந்து இங்கு பூசித்துக் கொண்டிருந்ததாகவும் அதனை மீட்டு எடுத்து செல்ல வந்த பிரம்மாவால் முயன்று அவரால் முடியாமல் இது என்ன வயிரதூணோ என்று கூறியதால் இறைவன் வயிரதூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இதையே திருநாவுக்கரசர் தன் பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரதூணே" என்று பாடுகிறார்.

இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் ஒரு சிலர் இங்குள்ள சிவபெருமானின் மழு நர்த்தனம் செய்ததால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.

திருஞானசம்பந்தரோ,

வரிந்த வெஞ்சிலை யொன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று பாடி அருள் செய்திருக்கின்றார்.

ஆனால் இறைவனோ ஒருமுறை சுந்தரர் மற்ற அருகில் உள்ள தலங்களைத் தரிசித்துவிட்டு திருவாலம் பொழிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர் கனவில் தோன்றி "மழபாடி வர மறந்தனையோ? என்று வினவினார்"

இதனை கேட்டு விழித்த சுந்தரர்,

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உனையல்லால் இனியாரை நினைக்கேனே’

என்று பாடி பின்னர் மழபாடி சென்று தரிசனம் செய்தார் என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-22, 5:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே