சேத்திரத் திருவெண்பா - பாடல் 17 -திருச்சிராமலை என்ற எறும்பியூர்

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

நேரிசை வெண்பா

கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடல்இரா வண்ணம் - அழிந்த(து)
இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர். 17

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, '’திருச்சிராமலையில் உள்ள சிவன் திருவடிகளைச் சேர்ந்து அவன் பாதங்களைத் தஞ்சமெனப் பற்று’ என்று கூறுகிறது.

பொழிப்புரை:

நெஞ்சமே! உயிர் இவ்வுலக வாழ்விலிருந்து போய்விட்டது; அதனால் முற்றிய நல்ல உடல் தன் அழகு, வலிமையை இழந்து தளர்ந்து நாற்றம் எடுத்து விட்டது. இனிச் சிறிது நேரமும் இருக்க முடியாதபடி அது அழிந்து விட்டது.

ஆகவே, இனிச் சிறிது நேரமும் இருக்க முடியாதபடி அதனை அடக்கம் செய்ய வேண்டிய இடத்திற்குக் கொண்டு போ ஐயா என்று அயலார் பலரும் சொல்வதற்கு முன் ’திருச்சிராமலையில் உள்ள சிவன் திருவடிகளைச் சேர்ந்து அவன் பாதங்களைத் தஞ்சமெனப் பற்று’ என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

`கழிந்தது` என்பதற்கு, `உயிர்` என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது. சிராமலை, திருச்சிராப்பள்ளிக் குன்று.

நெற்று: நெறி
1. A dried, mature seed or nut - முதிர்ந்து காய்ந்த காய். வாகை வெண்ணெற் றொலிக்கும் (குறுந். 7)

எறும்பியூர்: எறும்பீசர் - நறுங்குழல்நாயகி. இரயில் நிலையம்: திருச்சி - தஞ்சை வழி. கோயில் ஒரு சிறு மலையின் மீது இருக்கின்றது. மலையின் உயரம் சுமார் 60 அடி இருக்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-22, 5:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே