அங்காடி மேயும் பழங்கன்றே றாதலும் உண்டு - பழமொழி நானூறு 108
நேரிசை வெண்பா
உள்ளூ ரவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் - தள்ளா
தழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
பழங்கன்றே றாதலும் உண்டு. 108
- பழமொழி நானூறு
பொருளுரை;
விளங்குகின்ற இழையினை உடையாய்!
ஒலியினையுடைய பழைய நகரில் கடைத்தெருவில் நடக்க முடியாது நடந்து மேய்கின்ற பழைய கன்று வலிய எருதாதலும் உண்டு.
ஆதலால், ஒருவனுக்கு முதலாக இருக்கின்ற பொருளின் சிறுமையை அவனது ஊரில் வாழ்பவரால் ஐயமின்றி அறிந்தோம். ஆயினும் அவனைப் பொருளிலான் என்று இகழாமல் இருக்க வேண்டும்.
கருத்து:
பொருள் சிறிதுடையார் என்று யாரையும் இகழற்க.
விளக்கம்:
'உள்ளூரவரால்' என்றது அவரது பொருளின் அளவை உள்ளூரில் வாழ்வார் நன்கு அறிவார் ஆதலால் அவர்களால் ஐயமின்றித் தெளிய அறிந்தார் எனப்படும்.
'பழங்கன்று' என்றது உடல் இளைப்பால் பழைமையாகவும் வயதால் இளமையாகவும் இருத்தல். நடந்து செல்ல முடியாத கன்றும் வலிய ஏறாதல் போல, சிறிய முதலுடையாரும் பெரிய செல்வந்தராதல் உண்டு. ஆதலின் சிறிமை நோக்கி இகழற்க.
’பழங்கன்று ஏறு ஆதலும் உண்டு‘ என்பது பழமொழி.