நல்லதொரு குடும்பம்

நல்லதொரு குடும்பம்

வண்ண வண்ண நிலவுகளாக
வாசம் கொண்ட மலர்களாக
நட்சத்திரங்களின் கூட்டமாக
நவரசங்களின் அம்சமாக
பட்டாம்பூச்சியின் அழகாக
பாற்கடலின் அமிர்தமாக....

பாலோடு கலந்த தேனாக
பாசத்தோடு இணைந்த உயிராக
வானோடு சேர்ந்த நிலவாக
மண்ணோடு நிறைந்த உறவாக
கலந்தோம் என்றும் குடும்பமாக.....

குடும்பத் தலைவன் தந்தையும்
குலத்தை காக்கும் அன்னையும்
தோளில் சுமக்கும் பாட்டனும்
தோள் சாயும் பாட்டியும்
அன்பை கொடுக்கும் அக்காவும்
ஆதிக்கம் செலுத்தும் தங்கையும்
வம்பு செய்யும் தம்பியும்
வரம் கொடுக்கும் அண்ணனும்
உறவுகளாய் இணைந்திருந்தால்
விண்ணில் உள்ள சொர்க்கம் அது
மண்ணில் வந்து சேர்ந்திருக்கும்.....

எத்தனை எத்தனை உறவுகள்....
அதில்
எத்தனை எத்தனை வரவுகள்....

பாட்டன் வழி சொந்தம் என்றும்
பங்காளி வழி பந்தம் என்றும்....

தாய்வழி சொந்தமாக
தாங்கிப் பிடிக்கும் உள்ளமாக
தாய்மாமன் உறவு கொண்டு
தைரியமாய் துணை நிற்பான்...

தகப்பன் வழி உடன்பிறந்த
தன்னலமற்ற பாசத்தை
அத்தை எனும் அன்னை அவள்
ஆசை பொங்க அள்ளித் தருவாள்....

சிக்கித் தவிக்கும் நெருக்கடியில்
சிற்றன்னை எனும் உறவு
சிறப்பாக கை கோர்த்து
சீர்படவே வாழ வைப்பாள்....

பெருந்துன்பம் வரும் வேளை
பெரியப்பன் பெருமிதமாய்
பெட்டகமாய் நமை காத்து
பேரின்பம் தனை தருவான்.....

சொந்தபந்தம் சேர்ந்திருக்க
பந்தபாசம் செழித்திருக்க
உரிமையுள்ள உறவுகளாக
உதவி செய்யும் உள்ளங்களாக
வலிமை கொண்ட மனங்களாக
வர்ணஜால நினைவுகளாக
மகிழ்ந்திருப்போம் குதூகலமாக ....
இணைந்திருப்போம் குடும்பமாக.....

இனிய குடும்ப தின வாழ்த்துகள்...

-சாந்தீஸ்வரி ராஜாங்கம்

எழுதியவர் : சாந்தீஸ்வரி ராஜாங்கம் (17-May-22, 1:52 pm)
Tanglish : nallathoru kudumbam
பார்வை : 176

மேலே