உங்களுக்காக ஒரு கடிதம் 21
ஹாய்...ப்ரோ...
எப்படி இருக்கீங்க? எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சிடுச்சா? நல்லா எழுதி இருப்பீங்கன்னு நம்புறேன்.நான் நம்புறது கிடக்கட்டும். உன் நம்பிக்கைதான் முக்கியம். என்ன பூரண நம்பிக்கை இருக்கிறது அல்லவா? நம்பி கை வைக்கலாம் என்று நம்புகிறேன். உங்களுக்கென்ன ராசா குட்டிகள்...பாஸ் பண்ணிடுவீங்க...ஏன்னா இரண்டு வருஷத்துக்கு பிறகு "பப்ளிக் எக்ஸாம்" எழுதி இருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னால்... இரண்டு வருடங்கள் எக்ஸாம் இல்லாமல் வாழ்க்கையையே வீணடித்து, எதிர் காலத்தையையே தொலைத்துவிட்டு நிற்கும் உங்கள் சீனியர்ஸ்...அவர்களை பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்களாவது பரவாயில்லை. பப்ளிக் எக்ஸாம் எழுதிவிட்டீர்கள். அவர்களது எதிர்காலம்....என்ன " கோவிட் பேட்ச்சா?" என்று கேலிக்கும் கூத்துக்கும் ஆளாகி நொறுங்கிப்போய் கிடக்கிறார்கள். சரி...ஆல் தி பெஸ்ட் பார் யுவர் பிரைட் பியூச்சர்.
நான் எழுத நினைத்த சப்ஜெக்ட்டை விட்டுட்டு, வேறு எதை எதையோ கிறுக்கிக்கொண்டிருக்கிறேன். " கோபம் ". ஆம். அதை பற்றித்தான் எழுத நினைத்தேன். இந்த தலைமுறைக்கு...அதாவது உங்க தலைமுறைக்கு கோபம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அஸ் எ பிரென்ட் நான் சொல்லப் போவதை அட்வைஸா நினைக்காம கொஞ்சம் என்னோடு சிறிதுநேரம் பயணியுங்கள்.நான் சொல்வது நியாயமாகப் பட்டால் அதை பற்றி சிந்தித்து ஒரு முடிவெடுங்கள். கோபம் ஒன்றும் உங்க தலைமுறைக்கு மட்டும் சொந்தமில்லை. மனிதன் மூளைக்குள் எப்போது சுயநலம் நுழைந்ததோ அப்போதே தொடங்கிவிட்டது இந்த கோபத்தின் மாரத்தான் ஓட்டம். அப்போ தொடங்கிய ஓட்டம் இன்னும் நின்றபாடில்லை. இன்னும் வலுப்பெற்று...சக்தியோடு... விறுவிறுப்பாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு பலிக்கடாவாய் உங்கள் தலைமுறை. இந்த சப்ஜெக்ட்டை பற்றி உங்கள் கண்ணோட்டத்திலும்...பின் எங்கள் கண்ணோட்டத்திலும் விவாதிக்கலாம்.
முதலில்...என்னை உங்களோடு இணைத்துக்கொண்டு உங்களில் ஒருவனாய் இந்த பொருளை அலசி ஆராய்வோமா ? ஆமாம் நாங்கள் பிறந்ததிலிருந்து இப்போ வரை எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை...செலுத்தப்படுவதை கண்டு இந்த அப்பா அம்மா மேல், சகோதர சகோதரிகள் மேல் ஏன் இந்த சமுதாயத்தின் மேலே எங்களுக்கு கோபம் கோபமாய் வருகிறது. சின்ன குழந்தையாய் இருந்த போது எங்களுக்கு ஒன்றும் தெரியாது.ஒப்புக்கொள்கிறோம்.உங்களின் அன்பும் அனுசரணையும் ஆலோசனைகளும் தேவைதான். எங்களை சரியான பாதையில் வழிநடத்தாமல்..உங்கள் கனவுகளை....உங்கள் தோல்விகளை...உங்கள் லட்சியங்களை எங்கள் மீது திணிப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுக்கென்று ஒரு கனவு...ஒரு ஆசை...இருக்க கூடாதா என்ன? ட்ரெஸ் பண்ணுவதில்கூட உங்கள் ஆதிக்கம்தான். இந்த ட்ரெஸ்தான் போடணும்...ஜீன்ஸலாம் போடக்கூடாது. அது இதுன்னு இந்த காலத்தில்கூட.உங்க காலத்தில் ஒரு மொரட்டு காட்டன் இல்லைனா காதி..அதுவும் இல்லைனா டெர்லின் என்று இரண்டு மூணு வெரைட்டீஸ்தான். ஆனா எங்க காலத்துல Cropped and Pinrolled jeans, Upcycled jeans, Supper Raggy jeans, Light jeans, Straight Leg jeans, Flared jeans ..... Denim, Levi's, Acne, Ksubi போன்ற ட்ரெண்டிங்கில் உள்ள பிராண்டட் ஐடெம்ஸ் எத்தனை எத்தனை...கண்களை மட்டுமா கவருகிறது...பெண்களையும் கூடத்தானே...இந்த வயசில் போடாமல் எந்த வயசில் போடப் போகிறோம்? இது அல்ப விஷயமாகத் தோன்றலாம். ஆனால் எங்கள் உரிமையையே பறிப்பதுபோல நாங்கள் எண்ணுகிறோம்.
எண்ணெய் வழிய வழிய, வகிடெடுத்து..தலையோடு அழுந்த அழுந்த தலை வாருவது உங்க காலமப்பா...உங்க காலத்தில்... ஸ்கூட்டர் கட், சம்மர் கட்,போலீஸ் கட், உச்சி குடுமி, இல்லையென்றால் மொட்டை என்று முடிவெட்டுவதில் கூட ஸ்டைல் கொஞ்சம்தான். ஆனா எங்க ராஜ்யத்தில்....
தொடரும்.