பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும் நாணித் தலைச்செல்லார் – நாலடியார் 241

இன்னிசை வெண்பா

பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா 241

- அறிவுடைமை, நாலடியார்

பொருளுரை:

பிறிதொன்றினால் வருத்துதலில்லாத வலிமையினையுடைய இராகுவென்னும் பாம்பு மதியத்தை அஃது இளைய பிறை நிலாவாய் மாறின் சேராது;

அது போல, பகைவரின் தளர்வுநிலை கருதித் தகுதியான அறிவுடையோர் தாமாகவே உள்ளமொடுங்கி அவர்மேற் செல்லுதல் இல்லாதவராவர்.


கருத்து:

பகைவரேயாயினும் அவர் நிலை தளரின் அவர்க்கு இரக்கங் காட்டுதல் தகுதியான அறிவுடைமை ஆகும்.

விளக்கம்:

பணிவு இங்ஙனந் தாழ்ச்சிப் பொருட்டாதல் "பணிவில்ஆண்மை"1 என்பதனானுங் காண்க. தகவு - மேதக்க அறிவுடைமை. மேற்செல்லல் - போர்மேற் சேறல்; பிறையென்றதோடு அமையாது இளம்பிறை யென மேலும் விதந்தார், சிறுமையோடு மெலிவுந் தோன்ற என்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jun-22, 2:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே