திருவதிகை வீரட்டானம் - பாடல் 7
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).
பாடல் எண்: 7 - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கொலைவரி வேங்கை யதளுங்
..குவவோ டிலங்குபொற் றோடும்
விலைபெறு சங்கக் குழையும்
..விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும்
..மணியார்ந் திலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலும்
..உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை
..அஞ்ச வருவது மில்லை.
பொழிப்புரை:
தம்மால் கொல்லப்பட்ட கோடுகளை உடைய புலித்தோலும், திரட்சியோடு விளங்கும் பொலிவுடைய பொன்னாலாகிய தோடும், பெருவிலை மதிப்புடைய சங்கினாலான காதணியும் , விலையே இல்லாத மண்டையோடாகிய உண்கலனும், பார்வதி தங்குமிடமாகக் கொண்ட மார்பும், நீலமணியின் நிறங் கொண்டு விளங்கும் கழுத்தும், ஒழுகுகின்ற கெடில நதித்தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டானருடைய அடியாரும், உறவினருமாம் நாங்கள்.
ஆதலின் எங்களுக்கு அஞ்சுவதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனி அஞ்சுவதற்குரிய எதுவும் வரப்போவதும் இல்லை.
குறிப்புரை:
அதள் – தோல், குவவு - திரட்சி. தோளுக்கு ஆகு பெயர்.
காதில் அசையும் தோடு தோளிற்படுவது நூல்களிற் பயின்றது.
பொற்றோடு - (பொன் + தோடு) `தோடுடைய செவியன்`,
சங்கக் குழை - சங்கினால் ஆக்கப்பட்ட குழை, அதற்கு விலைமதிப்பு உண்டு.
அவர் ஏந்திய பிரம கபாலப் பாத்திரத்துக்கு விலை மதிப்பு இல்லை,