திருவதிகை வீரட்டானம் - பாடல் 6

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).

பாடல் எண்: 6 - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கரந்தன கொள்ளி விளக்குங்
..கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும்
..பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாளர்
..அறியப் படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலும்
..உடையார் ஒருவர் தமர்நாம் 6

அஞ்சுவதி யாதொன்று மில்லை
..அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை:

உயிர்கள் அறியாதவாறு மறைந்து நின்று அடியார்களுக்கு ஒளி வீசும் திருவருளாகிய விளக்கின் ஒளியும், உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் சுழலுகின்ற துடி என்ற இசைக் கருவியின் ஓசையும்,

எங்கும் பரவிய தேவ கணத்தர் பதினெண்மரும், வேற்றிடங்களில் பழகி அறியாதனவாகிய பாட்டின் ஒலியும், கூத்துவல்லார் கூத்தாடும் அரங்கங்களில் கண்டு அறியப்படாததாகிய கூத்து நிகழ்ச்சியும்,

முறையாக ஓடிவரும் கெடில நதித் தீர்த்தத்தின் புனிதமும் உடைய அதிகை வீரட்டானருடைய அடியாரும், உறவினருமாம் நாங்கள்.

ஆதலின் எங்களுக்கு அஞ்சுவதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனி அஞ்சுவதற்குரிய எதுவும் வரப்போவதும் இல்லை.

குறிப்புரை:

காரண காரியமாய் உயிர்க்கு உயிராய் நின்று முதல்வன் செய்யும் அருளுதவி குறித்தது இது. திருவருள் விளக்கம் உயிரறியாவாறு மறைந்து நின்று (சிவ போதத்தார்க்கு) ஒளிர்கின்றது பற்றிக் `கரந்தன கொள்ளி விளக்கு என்றருளினார்`.

`இருள் அடராது உள்ளுயிர்க்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது`.

கறங்கு: சுழலு; ஒலி; இருள் சூழ்.
கறங்கு: காற்றாடி; சுழற்சி; சத்தம்.
பாட்டு - சாமகீதம். வேதப் பாடல்.

பயின்று அறியாத - இராவணன் முதலிய சிலர் பயின்றறிந்த மட்டும் பயின்றன, பலர் பயிலாத அரிய பாட்டு.

அரங்கு - கூத்தாடும் இடம்.

சகளம், அகளம், சகளாகளம் என்னும் மூவேறு நிலைக்கும் உரிய மூவிடமும் அரங்காகும்.
அவ்வரங்கும் அங்கு ஆடும் கூத்தும் மதி நுட்பமுடன் குருவின் உபதேசமும் பெற்றவர்க்கே விளங்கும்.

எத்துணை நூலறிவுடையார் ஆயினும், ஏனையோர்க்கு எள்ளளவும் விளங்கா.

மதிநுட்பம் நூலோடுடையாரும் குருவின் உபதேசம் பெறாராயின், அவரால் அக்கூத்தும் அது நிகழும் அரங்கும் அறியப்படாமையை உணர்த்தினார் ஆசிரியர்.

நிரந்த – நிரல்பட்ட, முறையாக

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-22, 7:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே