நிழலின் அருமை வெயிலில் தெரியும்- பேச்சுப் போட்டி
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
பேச்சுப் போட்டி
அவைக்கண் குழுமியுள்ள ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் என் முதற்கண் பணிவான வணக்கங்கள் பல.
நான் இங்கு பேச எடுத்துக்கொண்ட தலைப்பு “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என்பதாகும். மேலோட்டமாகப் பார்த்தால் கொளுத்தும் வெயிலில் நிற்கும் ஒருவருக்குத்தான் வெயிலின் அருமைப் புலப்படும் என்பதாம்.
ஆனால் அத்தலைப்பினுள்தான் எத்தனை எத்தனை ஆணித்தரமான கருத்துக்கள் பயின்றுள்ளன தெரியுமா?
நம்மில் பெரும்பாலோர் செய்யும் சில பல தவறுகளை உங்கள் முன் வைத்தே அதற்கான கருத்துக்களைப் புலப்படுத்துகின்றேன்.
எத்தனை பேர் உணவுப்பொருள்களை வீணடிக்கின்றனர். நாம் கீழே சிந்தக்கூடிய ஒரு பரிக்கை உணவு ஓராயிரம் எறும்புகளுக்கு உணவாக அமைகின்றது. பசிகொடுமைக்காக அச்சிறிய உயிரினம் எடுத்துக்கொள்கின்ற மாபெரும் முயற்சி நாம் அனைவரும் கண்கூடாகக் காணக்கூடியதே!
ஒருபுறம் தண்ணீர் வீணாகப் பாய்ந்து பயனற்றுக் காணப்படுகின்றது. மறுபுறமோ வரண்ட பாலைவனத்தின் தாங்கொணா சூடு. எங்காவது சிறிது நீர் கிடைக்காதா என ஏங்கித்தவிக்கும் எத்தனை உள்ளங்கள்தான் அங்கே!
வீட்டில் ஒருவருமே இல்லாத அறையில் கூட சில வீடுகளில் வீணாக காற்றாடி சுழன்றுகொண்டும், மின்விளக்குகள் எரிந்துகொண்டும் இருப்பதனை நாம் பார்பதில்லையா? ஆனால் அகல்விளக்குகள் ஏற்றக்கூட வழியின்றி கதிரவன் மற்றும் சந்திரனின் ஒளிக்காக ஏங்குபவர்கள் எத்தனை எத்தனைப்பேர்.
ஒருநாள் அணிந்த புது ஆடைகளை மறுநாள் அணியத் தயக்கம் காட்டும் செல்வச் சீமான் வீட்டுச் சிறார்கள். ஆனால் குளிருக்காக ஓராடை கூட இல்லாமல் ஏங்கித்தவிக்கும் ஏழை எளிய மக்கள்.
பகட்டான மாடமாளிகைகளில் பஞ்சணையில் துயில் கொள்ளத் தவிப்போருக்கிடையே வெட்ட வெளியில் கட்டாந்தரையில் சுகமான நித்திரையில் இருப்பவர்களை நாம் காண்புறுவதுதான் இல்லையா?
ஆயிரம் ரூபாய் கொடுத்து காலணி வாங்கி அணியத் தயங்கும் சிலர் காலணியே இன்றி கொளுத்தும் வெயிலிலும், கரடு முரடான பாதையிலும் நடப்பதைத்தான் நாம் பார்பதில்லையா?
வெப்பத்தின் தேவை குளிர்ச்சியிலும்,
தண்ணீரின் தேவை தாகத்திலும்,
ஒளியின் தேவை இருளிலும்,
உணவின் தேவை பசியிலும்,
கல்வியின் தேவை அறியாமை வெளிப்பாட்டிலும்,
வயோதிகர்களின் தேவை ஆலோசனை வெளிப்பாட்டிலும்,
மருந்தின் தேவை நோயுற்ற காலத்திலும், போல
நிழலின் அருமை வெயிலிலும் தேவைப்படும்.
இவ்வாறு எத்தனை எத்தனையோ உதாரணங்கள். கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு, இருள் என்றால் ஒளி இருப்பதைப்போல இருபுற வாழ்க்கைக்கு நடுவே தான் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். என்பதனைக்கூறி என் உரையை முடிக்கிறேன்.
இதன் மூலம் தங்கள் முன் நான் வைக்கும் அன்புக்கோரிக்கை யாதெனின், இருப்பதனை எண்ணி அதனை நமக்களித்த இறைவனுக்கு நன்றி கூறவேண்டுமேயன்றி, இல்லாத ஒன்றிற்காக ஏங்கித்தவித்து பொன்னான வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது என்பதே ஆகும் என்று கூறி வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகூறி அமர்கின்றேன் வணக்கம்.