மலரின் பருவங்களும் திருக்குறளும்

மலரின் பருவங்களும் திருக்குறளும்

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்த பழந்தமிழர்கள் இயற்கையின் ஒவ்வொரு நிலையையும் உற்றுநோக்கி, தனித்தனிச் சொற்களால் அதைக் குறிப்பிட்டனர். அதற்கு மிகச் சிறந்த சான்றாக மலர்களின் வளர்ச்சிநிலைக்கு அவர்கள் வழங்கிய சொற்களைக் கூறலாம்.
பழந்தமிழ் இலக்கியங்கள் மலரின் பதின்மூன்று பருவ மாற்றங்கள் குறிப்பிடப்பெற்றுள்ளது.
1.அரும்பு- இலைகளுக்கிடையில் அரும்பும்நிலை
2.நனை - அரும்பு வெளியில் தலைகாட்டும்நிலை
3.முகை - தலைகாட்டிய அரும்பு திரட்சியாக மாறும்நிலை
4.மொக்குள் - பூவிற்குள் பருவமாற்றமான மணம் உருவாகும் நிலை
5.முகிழ் - மணம் கொண்டு முகிழ்தல்
6.மொட்டு - விரிந்தும் விரியாமல் இருக்கும்நிலை
7.போது - மொட்டு மலரும் போது ஏற்படும் புடைப்பு
8.மலர் - மலர்ந்தநிலை
9.பூ - முழுமையாக இதழ் விரிந்து மலர்ந்தநிலை
10.வீ - உதிரும்நிலை
11.பொதும்பல் - பூக்கள் பூத்துக்குலுங்கும்நிலை
12.பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் பூ
13.செம்மல் - உதிர்ந்த பூ செந்நிற மாற்றமடைந்து அழுகியநிலை.
இப்பதின்மூன்று பருவத்தை ஏழுநிலையாக சுருக்கி கூறுவர். அவை அரும்பு, முகை, மொட்டு, மலர், அலர், வீ, செம்மல் என்பதாகும்.
அரும்பு - பூக்கும் பருவத்தின் முதல்நிலை
மொட்டு - மொக்குவிடும்நிலை
முகை - முகிழ்க்கும்நிலை
அலர் - மலர்ந்து இதழ் விரிந்தநிலை
வீ - உதிரும் நிலை
செம்மல் - செம்மை நிறமடைந்த நிலை
இங்ஙனம் பூவின் பதின்மூன்றுநிலையும் ஏழுநிலையில் அடங்குகிறது எனலாம்.
"காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்" (குறள்.1227)
தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியை காதலாகிய துன்பம் அரும்பாக இருந்து பகல் முழுவதும் போதுநிலையாகிய மலரும் நிலையை அடைந்து மாலையில் முழுமலராகிறது. என வள்ளுவர் பூவின் பருவநிலையை மூன்றாக சுருக்கி ஒரே குறளில் கூறுகிறார்.
"முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு" (குறள்.1274)
பூ பருவமாற்றம் அடைந்து சற்று புடைத்துக்கொண்டு வரும்போது அதற்குள் மணம் உருவாதல் போல தலைவியின் புன்முறுவலாகிய மொக்குளில் காதற்குறிப்பு உள்ளது. இதில் தலைவியின் புன்முறுவலுக்கு முகை, மொக்குள் என்ற பூவின்
மணத்திற்கான பருவநிலைகளைக் காட்டுகிறார். பூவின் நிலைகளை உற்றுநோக்கி அதை மிகச் சிறப்பாக வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

எழுதியவர் : K.நிலா (9-Sep-22, 12:13 pm)
பார்வை : 64

மேலே