உயர்சிறப்பின் நண்குன்ற நன்னாட வாழாதார்க்கு இல்லை தமர் - நாலடியார் 290

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

ஆ‘ர்’த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம்; - நீ’ர்’த்தருவி
தாழா உயர்சிறப்பின் நண்குன்ற நன்னாட!
வாழாதார்க்(கு) இல்லை தமர் 290

- இன்மை, நாலடியார்

பொருளுரை:

இனிய நீரருவி இடைவிடாது ஒழுகுகின்ற மிக்க சிறப்பினை உடைய குளிர்ச்சியான மலைகளையுடைய உயர்ந்த நாடனே!

நிறைந்த புள்ளிகளை உடைய அழகுமிக்க வண்டுக் கூட்டங்கள், பூத்தல் மாறிய பூக்கொம்புகளிடத்திற் செல்லாது; ஆதலாற் பொருள் மலர்ச்சியில்லாத வறியோர்க்கு உறவாவோர் இல்லை.

கருத்து:

நுகர்பொருள்கள் மாறிய வறியோரை எவரும் நாடார்.

விளக்கம்:

சிலகாலம் வரையிற் பூத்துப், பின் பூவெடுத்தலே மாறிப் போன பூங்கொம்புகள் இங்குக் குறிக்கப் பட்டன.

உவமையின் கருத்தால், பொருள் மலர்ச்சியும் பிறர்க் குதவுதலுமுடையராய் உயிர் வாழ்தலே வாழ்தலாகும் என்பது பெறப்படும்.இச்செய்யுட் பொருள்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-22, 1:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே