குடைகலனா உப்பிலி வெந்தைதின்று உள்ளற்று வாழ்பவே – நாலடியார் 289
நேரிசை வெண்பா
கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண்(டு) அட்டுக் - குடைகலனா
உப்பிலி வெந்தைதின்(று) உள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால் 289
- இன்மை, நாலடியார்
பொருளுரை:
நுகரப்படும் பொருள்கள் நீங்கி வறுமையுற்றவிடத்து முன்பு செல்வராயிருந்தபோது கடகம் செறிந்திருந்த தம் கைகளினால், தூறுகளை வளைத்து அதிலுள்ள கீரைகளைப் பறித்து அதனையே முதன்மையாகக் கருதி உப்பில்லாமல் அவித்து பனையோலையின் முடக்கே உண்கலனாக அவ்வுப்பில்லாததான அவியலை மென்று வாயாறி அமைதியற்று உயிர் வாழ்வார்கள்.
கருத்து:
வறுமை நிலையினும் அமைதியிழந்த இழிந்த நிலை வேறில்லை.
விளக்கம்:
குடைவாகக் கட்டப்படுதலின் ஓலைப்பட்டை ‘குடை' யெனப்பட்டது;; இழிவு தோன்ற ‘வெந்தை' என்றும், பசியாறாது வாளா மெல்லுதல் தோன்றத் ‘தின்று' என்றும் விதந்தார்.
வெந்தை - அவியலெனப்படும்; உலத்தல் - ஈண்டு நிலைகெடுதல்