பெற்றநாள் பெற்றதனுள் ஆற்றுவதொன்று இற்றைநாள் ஈத்துண்டு இனிதொழுகல் – அறநெறிச்சாரம் 170
நேரிசை வெண்பா
பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனுள் ஆற்றுவதொன்(று)
இற்றைநாள் ஈத்துண்(டு) இனிதொழுகல் - சுற்றும்
இதனில் இலேசுடை காணோம் அதனை
முதனின்(று) இடைதெரியுங் கால் 170
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
நெஞ்சே! செல்வத்தினை அடையுந்தோறும் பெற்ற அச்செல்வத்தில் செய்வதற்குரிய அறத்தினை இப்பொழுதே செய்வோமென்று கருதி இரப்பவர்க்குக் கொடுத்து நீயும் உண்டு இனிமை பயக்கும் நன்னெறிக்கண் நின்று ஒழுகுவாயாக;
அவ்வறஞ் செய்தற்குரிய வழியை முதலிலிருந்து முழுவதும் ஆராயுமிடத்து எவ்விடத்தும் இதைக் காட்டினும் எளியது வேறொன்றும் இல்லை.
முன் கொடுத்தலால் வந்த செல்வத்தை மேலுங் கொடாதிருப்பது மூடத்தனம்

