என்னைகொல் காதல் கவற்றும் வனத்தினாற் கண்பாழ்பட்டு ஏதில் அவரை இரவு – நாலடியார் 306
நேரிசை வெண்பா
இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற்(கு) - என்னைகொல்
காதல் கவற்றும் வனத்தினாற் கண்பாழ்பட்(டு)
ஏதில் அவரை இரவு 306
- இரவச்சம், நாலடியார்
பொருளுரை:
தூய மெய்யுணர்வு உண்டாதற்கு உலகத் துன்பங்களே ஏதுவாயிருத்தலின், அத்துன்பங்கள் வந்து பொருந்துக, இன்பந் தருவன நீங்குக என்று தன் உள்ளத்தையே தான்வேண்டித் தெளிவு செய்து கொள்ள, அதனால் தம்மைவிட்டு நீங்கி விடுதற்குரிய பொருள்முடைக்காக அதற்கு மாறாய், அப் பொருளின்மேற் கொள்ளும் அவா வருத்துகின்ற மனத்தினால் அறிவு பாழாகிய அயலாரை ஒன்று இரத்தல் ஏன்?
கருத்து:
பொருளால் வருந்துன்பத்தை நோக்கி அதனைத் துறக்குந் தெளிவுடையோர், அப்பொருளுக்காகப் பிறரை இரக்க அஞ்சுவர்.
விளக்கம்:
கண் என்றது அறிவு; அவாவால் அறிவு மறைக்கப் படுதலின், ‘காதல் கவற்று மனத்தினாற் கண் பாழ்பட்'டென்றார்; இரவாழிதற்கு இச்செய்யுளிற் கருவி கூறப்பட்டது.