பொன்னியின் செல்வன் அலப்பறைகள்
கல்கி இதழில் கல்கி அவர்கள் எழுதிய, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் , பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்கள் வெளியான போது மாபெரும் வரவேற்பை பெற்றன.. அன்றைய கால கட்டத்தில் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகாது. ஆகவே பொதுமக்களின் பொழுது போக்கே விகடன், குமுதம், கல்கி போன்ற வார இதழ்கள். மட்டுமே. கல்கியின் பார்த்திபன் கனவு சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் இராமாயணம மகாபாரதம் அளவிற்கு மக்களை கவர்ந்த புதினங்களாக திகழ்ந்தன. மக்களிடையே இந்தப் புதினங்களுக்கு இருந்த வரவேற்ப்பை பார்த்து பார்திபன் கனவை திரைப் படமாக்கினார் ஒரு தயாரிப்பாளர். ஜெமினி கணேசன் கதானாயகனாக நடித்து வெளியான அந்தத் திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெறாததால் தோல்வியைத் தழுவியது. தயாரிப்பாளர் மிகப் பெரிய பொருளாதர இழப்பினை சந்த்தித்தார். அதனால் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகியவற்றைத் திரைப்படமாக ஆக்க நினைத்தவர்கள், அந்த முயற்சியை கை விட்டனர். பின்னர் எம்ஜியார் அவர்கள் பொன்னியின் செல்வனை திரைப் படமாக நினைத்து அதன் உரிமைகளை வாங்கினார். ஆனால் என்ன காரணத்தினாலோ அவரால் அதை திரைப் படமாக்க இயலவில்லை. உரிமை எம்ஜியார் அவர்களிடம் இருந்த்தால் வேறு யாரும் அதனை படமாக்க இயலவில்லை.
பொன்னியின் செல்வன் பதிப்புரிமை கல்கி இதழிடமே இருந்ததால் அதனை வேறு பதிப்பகங்கள் பதிப்பிக்க முடியவில்லை .கல்கி இதழில் அவ்வப்போது தொடர்கதையாக வெளியாகிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக தற்பொழுது 35 வயதிற்க்கு கீழுள்ளவர்களில் பெரும்பாலோர் இதனை படித்திருக்க மாட்டார்கள். திரு கமலஹாசன் பொன்னியின் செல்வனின் திரைப்படமாக்கும் உரிமையை எம்ஜியார் அவர்களிடம் பெற்றிருந்தது கூட அப்பொழுது எவருக்கும் தெரியாது. கல்கியின் நூறாவது பிறந்த நாளின்போது கல்கியின் படைப்புகள். அனைத்தும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின்னரே பல பதிப்பகங்கள் பல வடிவங்களில் பொன்னியின் செல்வன் நாவலை வெளியிடத் தொடங்கின. அதன் பிறகுதான் மீண்டும் அது மக்களிடையே பிரபலமாகத் தொடங்கி இன்றுவரை பெரும்பாலான புத்தகக் கண்காட்சிகளில் அதிக விற்பனையாகும் நூல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இப்படிப் பட்ட சூழ் நிலையில்தான் பொன்னியின் செல்வன் திரைப் படமாக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியான நாளிலிருந்து பொன்னியின் செல்வன் தொடர்பான அலப்பறைகள் தமிழ் ஊடகங்களில் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.
இதுவரை சராசரி வாசகர்களால் அறியப்படாதிருந்த தமிழ் முண்ணனி எழுத்தாளரான திரு ஜெயமோகன், பொன்னியின் செல்வனின் திரைக்கதை ஆசிரியர் என்பதால் ரசிகர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டார். தொலைகாட்சி மற்றும் யு ட்யுப்பில் அவர் பேட்டிகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. தமிழக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களிடையே ஜெயமோகன் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என்ற இரண்டு பிரிவு எப்பொழுதும் உண்டு. பொன்னியின் செல்வன் வெளியான பிறகு அவருடைய எதிர்ப்பாளர்களான் இடது அரசியல்வாதிகள் சிலர் ஜெயமோகன் எவ்வளவு மோசமான ஒரு எழுத்தாளர் என்பதை இந்தத் திரைகதை விளக்குவதாக விமர்சனம் செய்கிறார்கள்!
புதிதாக அறிமுகம் செய்யப் பட்டிருக்கும் பாடலாசிரியர் பற்றி எதுவும் கூறாமல் இந்தப் படத்தில் ஏன் திரு வைரமுத்து அவர்கள் பயன்படுத்தப் படவில்லை என்று ஊடகங்கள் விவாதிக்கின்றன.
படம் வெளியானப் பிறகு பல அறிமுகம் இல்லாத வரலாற்று ஆய்வாளர்கள் ஊடகங்களில் தோன்றுகிறார்கள். அதில் பெரும்பாலணோர் படத்தை விமர்சிக்காமல் ராஜராஜ சோழனை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பண்டிதர் நேரு இல்லாமல் பட்டேல் பிரதமராகி இருந்தால் இந்தியா என்றோ வல்லரசாகியிருக்கும் என்று தற்கால அரசியலில் சிலர் லாவணி நடத்திக் கொண்டிருப்பது போல் ராஜராஜ சோழனுக்கு பதிலாக ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வந்திருந்தால் அன்றைக்கே தமிழகம் வல்லரசாகியிருக்கும் என்று ஒரு வரலாற்று ஆய்வாளர் கூறுகிறார்.
ஆதித்த கரிகாலன் பிராமணர்களால் கொல்லப்பட்டான். அதனை கல்கி வேண்டுமென்றே மறைத்து விட்டார் என்கிறார் இன்னொருவர்.
ராஜராஜ சோழன் ஏழைகளிடமிருந்து நிலங்களை எல்லாம் பிடுங்கி பார்ப்பனர்களுக்கு அளித்துவிட்டு அவ்வூர்களையெல்லாம் சதுர்வேதி மங்கலமாக மாற்றிவிட்டான் என்கிறார் மற்றொருவர்.
தஞ்சாவூர் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் விமானம் 80 டன் ஒற்றை கல் என்றும் அதனை உயரத்திற்கு தூகி செல்ல சுமார் 6 கிமி தூரத்திலிருந்து சாரம் அமைக்கப் பட்டது என்றும் அவ்வாறு சாரம் அமைக்கப்பட்ட கிராமம் சாரப்பள்ளம் என வழங்கப்படுகிறது என்பதும் கட்டுக்கதைகள் என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்.
ராஜராஜ சோழனைவிட ராஜேந்திர சோழந்தான் ஆற்றல் மிகுந்தவன் எனக் கூறி ஆதாரங்களை அடுக்குகிறார் வேறொருவர்.
ராஜராஜன் இந்து மன்னன் என ஒரு அரசியல் கூற அதனை இல்லை என மறுக்கின்றனர் சில அரசியல் கட்சித்தலைவர்களும் திரைப்பட இயக்குநர்கள் சிலரும். சில ஆய்வாளர்கள் ஒரு படி மேலே சென்று ராஜராஜன் தமிழனே இல்லை எனவும் அதனால் அவனைப் பற்றி நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை என நகைக்கின்றனர்.
இந்த ஆய்வுகள் எல்லாம் உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ராஜராஜனின் காலம் ஏறத்தாழ 1500 ஆண்டுகளாய் முன்னதாய் இருக்கக் கூடும். பொன்னியின் செல்வன் கதை எழுதப்பட்டது 1950 இலிருந்து 1955க்குள் இருக்கும். மேலும் பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்று ஆய்வு நூலும் அல்ல. அப்படி இருக்க அது திரைப்படமாக்கப் பட்டபின் ஏன் இவ்வளவு வரலாற்று அலப்பறைகள் என்று புரியவில்லை.
படத்தைப் பற்றிய விமர்சனங்களோ இதை விட வினோதமாக இருக்கிறது
பொன்னியின் செல்வன் தமிழர் அல்லாதவர்களால் தமிழனின் வரலாற்றை மறைக்க எடுக்க பட்ட படம் என்கிறார் ஒரு யுட்யூபர். கதை எழுதிய கலகி, இயக்கிய இயக்குனர், நடித்திருக்கும் பல நடிகை நடிகர்கள் தமிழர்கள் அல்ல என்றும் படமே ஆந்த்ராவில்தான் எடுக்கப்பட்டது என்று விமர்சிக்கிறார் ஒரு விமர்சகர்.
சில ரசிகர்கள் இது படமா பார்க்கவே முடியவில்லை என கடுமையாக சாடுகிறார்கள். சிலர் கதையே புரியவில்லை என்கிறார்கள். பாகுபலியிடன் ஒப்பிட்டால் இது ஒன்றுமில்லை என்கிறார்கள். ஆனால் இம்மாதிரியான விமர்சர்கள் பொன்னியின் செல்வன் கதையை முற்றிலும் அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.
கதையை பலமுறை படித்தவர்களோ கதை போல் இல்லை படம் என்று ஆதங்கப்படுகிறார்கள். .
ஒரு பெரிய புதினத்தை அப்படியே படமாக்குவது இயலாத காரியம். வணிக ரீதியாக படம் வெற்றிப் பெற சில காம்ப்ரமைஸ்களை அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதனை தெரிந்தேதான் செய்கிறார்கள். இது குறித்து திரு ஜெயமோகன் அவர்கள் ஒரு பேட்டியில் இப்படி கூறுகிறார்." நாவலின்படி அரூள்மொழிவர்மனுக்கும் வந்தியத் தேவனுக்கும் ஏறத்தாழ இருபது வயதுதான் இருக்கும். ஆனால் அந்தப் பாத்திரங்களில் நடித்திருக்கும் ஜெயம் ரவி அவர்களும் திரு கார்த்தி அவர்களும் வயது முதிர்ச்சி உடையவர்கள். அதானால் அதற்கேற்றாற் போல் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது" உண்மைதான். வணிகத்திற்க்காக பிரபலமான நட்சத்திரங்களை நடிக்க வைப்பது தவிர்க்க முடியாது. எனவே சில காம்ப்ரமைஸ்களும் தவிர்க்க முடியாதவையே.
இந்த அலப்பறைகளை எல்லாம் தாண்டி படம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துத்தான் படம் வெற்றி அடைகிறது.
படம் பார்த்துவிட்டு வெளியே வரும் பெரும்பாலான மூத்த ரசிகர்கள் கண்களில் பல ஆண்டுகளாக நிறவேறாதிருந்த ஒன்று நிறைவேறியது போன்று ஒரு மகிழ்ச்சி காணப்படுகிறது. பல ரசிகர்களுக்கு படத்தின் பிரமாண்டமும் தொழில் நுட்பமும் படத்தை ரசிக்க வைக்கிறது. வரலாற்று கதைகளை அறியாத சில ரசிகர்கள் வசைபாடி கொண்டிருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் கதையை ரசித்து படித்து அதிலேயே ஆழ்ந்த பலர் நாவல் போல் படம் இல்லை என ஏமாற்றத்தை தெரிவிக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழர்களையும் சோழப் பாண்டியர்களை இழிவுபடுத்துவதாகவும் செய்யப்படும் அலப்பறைகளும், படம் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம் போன்றும் அதனைப் பார்க்காதவர்கள் தமிழினத்தின் விரோதிகள் என்பது போல செய்யப்படும் அலப்பறைகளும் கேலிக்குரியவை. படம் வெளியாகி இவ்வளவு நாட்களாகியும் இந்த அலப்பறைகள் குறையவில்லை. படம் தொடர்பான அரைகுறை ஆய்வுகளும்,,இன மொழி கூச்சல்களும், சாதி மத இறைச்சல்களும் நாம் நம்முடைய பரந்த மனப்பான்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோமோ எனத் தோன்றுகிறது.