இறப்ப எமக்கீது இழிவரவென் றெண்ணார் - பழமொழி நானூறு 198
நேரிசை வெண்பா
இறப்ப எமக்கீ(து) இழிவரவென் றெண்ணார்
பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினால்
சாலவு மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே
தால அடைக்கலமே போன்று. 198
- பழமொழி நானூறு
பொருளுரை:
குடிப்பிறப்பினால் மிகவும் உயர்ந்தவர்கள் போய் குடிப்பிறப்பினால் இழிந்தவர்களைச் சார்பாகப் பெற்று எமக்கு இங்ஙனம் வாழ்தல் மிகவும் இழிவைத் தரும் என்று நினையாராய் ஒருவரிடம் வைக்கப் பெற்ற நிலமாகிய அடைக்கலப் பொருளைப்போல் பெருமையின்றி வாழ்வார்கள்.
கருத்து:
உயர்குடிப் பிறந்தோர் சில காரணங்களை முன்னிட்டு இழிந்த குடியில் பிறந்தாரது சார்பு பெற்று ஒளியின்றி வாழ்வார்கள்.
விளக்கம்:
உடையானிடத்தில் வளம்பெற்றிருந்த நிலம் வேறொருவனிடம் வைக்கப்பட்ட இடத்து அஃதின்றி இருத்தல் போல, உயர்குடிப் பிறந்தோர் பெருமை இழந்து வாழ்வார்கள்.
சிறந்த நலன்களைக் கருதி அவரிடம் வாழ்தலின் இழிவாகக் கருதார்.
'தால அடைக்கலமே போன்று' என்பது பழமொழி.