அக்காரம் பால்செருக்கு மாறு - பழமொழி நானூறு 199
இன்னிசை வெண்பா
தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அதுவானால்
மிக்க வகையால் அறஞ்செய் கெனவெகுடல்
அக்காரம் பால்செருக்கு மாறு. 199
- பழமொழி நானூறு
பொருளுரை:
மாறுபாடில்லாத செயல்களை உடைய செல்வத்தை ஒருவன் பெற்றால் அச்செல்வம் திரண்டு வந்த திறனும் அதற்குக் காரணமாயிருப்பதும் அறமேயென்று அறியப்படுமானால்,
பலதிறப்பட்ட நெறியால் அறம்செய் என்று ஒருவன் சொல்ல அவனைச் சினத்தல் சர்க்கரை கலந்த பாலை உட்கொள்ளாது குமட்டித் துப்புதலை யொக்கும்.
கருத்து:
அறத்தாற் பொருள் பெறலாம் என்று அறிபவன் பலதிறப்பட்ட நெறியால் அறமியற்றக் கடவன்.
விளக்கம்:
தருக்கம் - தக்கம் என்றாயது.
மாறுபாடு என்பது பொருள் மாறுபட்ட செயல்கள்.
உடையாரால் செய்யப்படுகின்றனவே யன்றி, அதன் இயற்கை அன்று என்பார், 'தக்க மில் செய்கைப் பொருள்' என்றார்.
தொக்க வகையும் முதலும் என்றது பொருள் தொக்கு வருதற்குக் காரணமும் காரியமும் அறமேயாம் என்பது.
அங்ஙனம் அறிந்திருந்தும் அறஞ்செய்க என்பாரை வெகுடல், அக்காரம் கலந்த பாலைக் கொள்ளாது துப்புதலை யொக்கும்.
'அக்காரம் பால்செருக்கு மாறு' என்பது பழமொழி.