என்றும் அவனே பிறக்கலான் இரப்பாரை எள்ளா மகன் – நாலடியார் 307
நேரிசை வெண்பா
என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
தென்று மவனே பிறக்கலான் - குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட!
இரப்பாரை எள்ளா மகன் 307
- இரவச்சம், நாலடியார்
பொருளுரை:
மலையின் பரந்த இடமெல்லாம் பொன் பரவுதற்கு ஏதுவான பாயும் மலையருவிகளையுடைய நாடனே!
இந்த உலகத்தில் என்றும் புதிக மக்கள் பிறந்தாலும் என்றும் அவனொருவனே உண்மையிற் பிறத்தலுடையான்; அவன் யாரெனில், இரந்துண்ணும் எளியோரை இகழாதொழுகும் மகனெனத் தக்கான் என்க; (ஏனையோர் பிறந்தும் பிறவாதவராவர்)
கருத்து:
இரப்பாரை இகழாதவனே மகனெனப் பாராட்டப்பட்டுப் பிறப்பின் பயனெய்துவோனாவன்.
விளக்கம்:
புதியாரென்றது, புதிய வடிவினையுடைய மக்கள்; அவனே என்று முதலிற் சுட்டினால் உணர்த்திப் பின் விளக்கினார்,
இது செய்யுளாகலானும் உலகத்தில் அவனொருவனே பலரானும் மனிதனாக மதிக்கப்பட்டு பிறவியின் பயனுடையனாய், பாரிவள்ளல் போன்று,
ஏனையோரினும் மேம்பட்டு விளங்குதல் வெளிப்படை ஆகலானுமென்க. அவன் என்றது இனவொருமை.