வயிறு பேசுகிறது

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*வயிறு பேசுகிறது*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


*மனிதன்...*

ஏய் ! வயிறு
"அய்யாசாமி சாப்பாடு" என்கிற
உனக்கென்ன
அள்ளிப் போடுகிற
எங்களுக்கு தானே தெரியும்...?

உனக்கு
இதயமே இல்லையா?
பசி தீயை
வயிற்றில் பற்ற வைத்து
அவ்வப்போது
எங்களை
துன்பம் படுத்துகிறாயே!
உனக்கு
இரக்கமே இல்லையா ?

ஏழை பணக்காரன் என்று
பார்க்காமல்
எந்த நேரமும் என்று கூட
பார்க்காமல்
இருக்கிறதா ?இல்லையா? என்று
கேட்காமல்
பற்ற வைத்து விடுகிறாயே!
பசித்தீயை
நீ பற்ற வைத்த நெருப்பு
நீரால் அணைவதாக
இருந்தால் கூட பரவாயில்லை
உணவால் அல்லவா
அணைக்க முடிகிறது
நாங்கள் என்ன செய்வது?

போடப்போட
சாப்பிட்டுக் கொண்டே
இருக்கிறாயே !
போதும் என்று
எப்போது தான்
சொல்வாய் ?

*வயிறு....*

ஏய் நிறுத்து மனிதா!
நானும்
பொறுத்துக் கொண்டிருந்தால்
நீ அதிகமாக
பேசிக் கொண்டே ! இருக்கிறாய்...
நீ அறிந்து பேசவில்லை
அறியாமையால் பேசுகிறாய்....
புரிந்து பேசவில்லை
புரியாமல் பேசுகிறாய்....
உணர்ந்து பேசவில்லை
உணர்ச்சிவசப்பட்டு
பேசுகிறாய்.......

உங்களுடைய
காதலுக்கும்
கத்தரிக்காய்க்கும்
வேண்டுமானால்
இதயம் கண் என
தூக்கி வைத்துக் கொண்டு
நீங்கள் ஆடலாம்....
ஆனால்
வாழ்க்கைக்கு
வயிறு தான் தலை....

கண்ணில்லாமல்
கை கால் இல்லாமல்
வாழ முடியும்
வயிறு இல்லாமல்
யாராவது வாழ முடியுமா?

இதயத்தைக் கூட
அறிவியலால்
மாற்றி வைக்க முடிந்தது
என்னை
மாற்றி வைக்க
உங்க அப்பனாலும் முடியாது !

ஜான் பிள்ளை என்றாலும்
ஆண் பிள்ளை என்று
சொல்வது போல்
நான்
ஒரு ஜான் என்றாலும்
இந்த உலகத்தையே
இயக்குவது
நான் தான்
என்ன புரியவில்லையா ?

நான் பசித்தீயை
பற்ற வைக்கவில்லை என்றால்
பாரில் உள்ள மக்கள்
பாடுபடுவார்களா ?
இல்லை....
ஓடி ஓடி உழைப்பார்களா?

பசி இல்லாத
ஓர் நிலையை
ஒரு நிமிடம்
கற்பனைச் செய்து பார்.....

பசி இல்லை என்றால்
உண்பதற்கு உணவில்லை
உணவு இல்லை என்றால்
பணம் எதற்கு ?
பணம் இல்லை என்றால்
வேலை எதற்கு ?
வேலை இல்லை என்றால்
வேலையாட்கள் எதற்கு?

வீட்டை கட்டுவது யார் ?
வாகனத்தை இயக்குவது யார்?
பாடம் நடத்துவது யார் ?
ஆடை நெய்வது யார் ?
விவசாயம் செய்வது யார் ?
வியாபாரம் செய்வது யார் ?
இன்னும்
எத்தனையோ இருக்கிறது
அதை எல்லாம் செய்வது யார்?

மனித
வாழ்க்கை சக்கரத்தில்
நான்தான் அச்சாணி
மறந்து விடாதே !

பறவைகள் கூட
பசி இல்லை என்றால்
பறக்க மறந்து விடும்....
விலங்குகள் கூட
பிறக்கும் போது
விழுந்த இடத்திலேயே
வளர்ந்து இறந்து விடும் .....

உன் தாய்
பத்து மாதம்
உன்னை சுமந்திருக்கலாம்....
ஆனால்
நான் இல்லை என்றால்
அவள்
எதில் உன்னை சுமந்திருப்பாள்?

*கவிதை ரசிகன்*


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் (21-Jan-25, 10:14 pm)
Tanglish : vayiru pesukirathu
பார்வை : 13

மேலே