விதைப் பந்து

விதைப் பந்து..!

பிரபஞ்சத்தில் உலகத்தை
விதைத்தவனே கடவுள்
வெடிக்காத விதைக்குள்ளே
விளைபயிராய் பலஉயிர்கள்..!

மனிதவித்தின் மூலம்தான்
ஆதாமும் ஏவாள்
ஏராளம் எண்ணிக்கையில்
மனிதப்பயிர்கள் இந்நாள்..!

தந்தையவர் விதைப்பினில் நாம்
நடமாடும் செடிகள்
வளர்த்திடுதே கர்ப்பத்தில்
அன்னைத்தொப்புள் கொடிகள்..!

விரிந்தவானில் சூரியனை
விதைக்கிறதே வானம்
விளைச்சலில்தான் கிட்டிடுதே
வெளிச்சந்தான் நாளும்..!

சேமிப்பும் விதைப்பந்தே
ஆபத்தில் காக்கும்
சிக்கனதை விதைத்துப்பார்
சங்கடங்கள் தீர்க்கும்..!

சூட்சிகளை விதைத்தாரே
பிணங்கள்தான் விளைச்சல்
சகுனி வளர்த்த விதையினாலே
சகலருக்கும் உளைச்சல்..!

சோதனைக்கோ விதைத்திடுவார்
மந்திரத்தை முந்தி
கர்ணனவன் பிரிவினிலே
வருந்தினாளே குந்தி..!

தானத்தை விதைத்துப்பார்
புண்ணியங்கள் விளைச்சல்
நிதானத்தை விதைத்துப்பார்
வெற்றிக்கில்லை குறைச்சல்..!

நல்லெண்ணம் விதைப்போர்க்கு
நல்லதென்றும் நடக்கும்
கள்ளத்தினை விதைப்போரை
காலந்தானே கவிழ்க்கும்..!

சாதி விதை தூவுகிறார்
விளைச்சலாய் விரோதம்
வெட்டுக்குத்து அறுவடையில்
உயிரிழக்கும் தேகம்..!

கலப்புகாணும் திருமணத்தில்
கௌரவம் விரோதி
ஓர் குலத்தை விதைத்துப்பார்
ஒழியும் பல சாதி..!

வாக்குகளை விதைத்திட்டோம்
விளைச்சல் காணவில்லை
நேர்மை நாட்டில் விதைத்தால்தான்
நன்மை விளையும் உண்மை..!

இந்திவிதை விதைக்கின்றார்
வெந்நீரை ஊற்று
எந்தமிழே செம்மை விதை
எங்கும் விளைச்சலாக்கு..!

காலம் பார்த்து விதைப்பதெல்லாம்
கருகிப் போவதில்லை
ஞாலம் சிறக்க ஞானம்விதை
ஊரும் போற்றும் உன்னை..!

இத்தனைக்கும்மேலுண்டு
மழைக்காக்கும் விதைகள்
அத்தனையும் தூவிடலாம்
உயிர்காக்கும் அவைகள்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (15-Jul-25, 8:00 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 7

மேலே