ஈகையைப் போன்று மறுமைக்கேற்றது எதுவுமில்லை – அறநெறிச்சாரம் 182
நேரிசை வெண்பா
ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில்
யாவருங் கொள்ளாத வாறெண்ணி - மேவரிய
மற்றுடம்பு கொள்ளும் பொழுதோர்ந்து தம்முடமை
பற்று விடுதல் இலர் 182
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
தமது பொருளை உலகில் மற்றை யாவரும் கவரா வண்ணம் காக்கவல்லதும், அப் பொருளை அடைதற்கரிய மறுபிறவியைத் தாம் அடையுங் காலத்தும் அதனைத் தம்பால் அடைவிக்க வல்லதும் அறமே என்பதனை ஆராய்ந்தறிந்து அப் பொருளின் மேல் வைத்த பற்று நீங்காராய் ஈதலால்,
இரப்பவருக்கு அவர் வேண்டுவதை ஈவார் போன்ற கடும் பற்றுள்ளம் உடையார் வேறு இலர்.
குறிப்பு:
ஈகையின் சிறப்பினை உயர்த்துக் கூறுவான், “ஈவாரின் உலோபர் இலர்” என்றார்.

