"போ!"
உன் அன்பான பார்வைதான்
நம் காதல் பயிரை
வளர்க்கும் நீரானது;
பிரிந்த உன் இதழ்களில் இருந்து
பிரிந்த புன்னகைதான்
அந்த ஆயிரம் காலத்துப் பயிர்
செழித்து வளர உரமானது;
உன் வாசமான
கார்குழல் மேகமாகி
என் மார்பு வானத்தில்
படர்ந்த நெருக்கம்தான்
நம் காதலை
இன்னும் கொஞ்சம்
இனிப்பாய் ஆக்கியது;
இந்த வேளையில்தான்
அந்தக் கோபம் -
எங்கிருந்து உனக்கு வந்தது?
பொய்க் கோபம் என்றுதான்
நானும் பொறுமைகாத்து உன்னிடம் இருந்து
கொஞ்சம் விலகி நின்றது...
உன் வாசலில் என்னை
மீண்டும் வரவேற்பாய்
என்று நம்பித்தான்
நீ செல்லும் திசையெல்லாம்
தெருக்களாய் நான்
விழுந்து கிடந்தது...
என் அன்பே!
இன்னும் என் அன்பே!
உனக்குப் பிடிக்காத
சிகரெட்டை நான் பிடித்தபோதும் கூட
உனது பார்வை என்
மீதுதானே சொக்கி நின்றது?
உன்னைத்தான் கேட்கிறேன்
உன்னால் புறக்கணிப்பு செய்யப்படும்
அளவுக்கு
எனது செயல்களுள்
எதுதான் வித்தானது ?
"போ!", என்ற ஒற்றைச் சொல்லால்
என் வெள்ளை வானத்தை
கருப்பால் மூடியவளே!
அப்படியென்றால் -
நம் காதல்
நுனிப்புல்லின் பனித்துளிதானா?
உன் பார்வை,சிரிப்பு ,நெருக்கம்
எல்லாமே அதை உறிஞ்ச
வந்த வெயிலின் மாறு வேடமா ?
ஒரு காதலனின் மரணத்திற்கு
நீ காரணம் என்பதைக் கூட
உலகம் மன்னிக்கும்;
ஆனால் ஓரு காதலுக்கே
நீ மரணம் தந்தவள் என்பதை
உன் உள்மனம் கூட
மன்னிக்காது;
"போ!"

