ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம் குன்றின்மேல் இட்ட விளக்கு - பழமொழி நானூறு 204

இன்னிசை வெண்பா

கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும் தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு. 204

- பழமொழி நானூறு

பொருளுரை:

வெகுண்டு அளவு கடந்த தீயசெயல்களை மிகப்பல நாட்கள் செய்தாராயினும் அவற்றுள் ஒரு குற்றமும் சிறியாரிடத்து எப்பொழுதாயினும் தோன்றுதல் இல்லை. உயர்ந்தோர் செய்யும் குற்றம் ஒன்றாக இருப்பினும் மலையின் மீது வைத்த விளக்கினைப் போல் என்றும் விளங்கித் தோன்றும்.

கருத்து:

பெரியோர்கள் செய்த குற்றம் நன்றாக விளங்கித் தோன்றும்.

விளக்கம்:

உயர்ந்தார் இயல்பாகவே தீங்கு செய்தல் இலர் என்பார், 'உயர்ந்தார்ப் படுங் குற்றம்' என்றார்.

தன்மேல் உள்ள விளக்கைப் பலருக்கும் காட்டுதல் குன்றேயாதல் போல, பெரியோர்களிடத்துள்ள தீமையை விளக்கிக் காட்டுவது அவர்களது நற்குணமே ஆகும்.

சிறியார் நன்மை செய்யாராதலின் அவர் தீமை தெரிய வராது என்பதாம்; அவர் என்றும் நன்மை செய்தல் இலராகலின், அவர் தீமை என்றும் தோன்றுதல் இல்லை.

தீயார் தீமை தோன்றுதல் கூட இல்லை. பெரியார் தீமை விளங்கித் தோன்றும். 'என்றானும் தோன்றாதாம்' என்றமையால் எப்பொழுதும் விளங்கித் தோன்றும் என்பது கொள்ளப்படும்.

'குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து' என்பது இக்கருத்துப் பற்றி எழுந்தது.

'குன்றின்மேல் இட்ட விளக்கு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-22, 4:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே