கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதையோர் சூத்திரம் – நாலடியார் 314

நேரிசை வெண்பா

கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும் 314

- அவையறிதல், நாலடியார்

பொருளுரை:

தாம் ஆழ்ந்து பயின்றதுமின்றித் தக்க கேள்வியுமின்றிப் பள்ளி ஆசிரியர் நெட்டுருச் செய்வித்த மனப்பாடத்தால் தெரிந்து கொண்டதாகிய ஒரு நூற்பாவினை நற்புலவர் அவையிற் சென்று நாணுதலின்றி விரித்துரைத்து அறிவிலான் தனது சிற்றறிவினைக் காட்டிக் கொள்வான்.

கருத்து:

நூல் நுட்பங்களை நன்குணர்ந்து விளங்கும் நற்புலவரிடையில் ஏனையோர் நாவடக்கமுடையராதல் வேண்டும்.

விளக்கம்:

கற்றதூஉமின்றி என்னும் உம்மை கேட்டதூஉமின்றி என்பது விளக்கி நின்றது. கணக்காயர், கல்வி கற்பிக்கும் பள்ளியாசிரியர்; ஓர் சூத்திரமென்றார்;வேறு தெரியாமையானும் அஃதும் அரிதிற் கிடைத்தமை யானும்; பிழையைப் பிழையென்று கருதும் உள்ளவொடுக்கம் இல்லாமையின், ‘நாணாது சொல்லி' எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-22, 3:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே