சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர் - நாலடியார் 313
நேரிசை வெண்பா
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார், - கற்ற
சிலவுரைக்கும் ஆறறியார், தோற்ப தறியார்,
பலவுரைக்கும் மாந்தர் பலர் 313
அவையறிதல், நாலடியார்
பொருளுரை:
சொல்லாகிய முட்கோல் கொண்டு நா தினவெடுத்துப் பேச முற்படுதலை மிகவிரும்பும் இயல்பினர் நூல் நுட்பங்களைக் கற்றறிந்து ஒழுகும் வல்லமையுந் தாம் தெளியார்; தாம் கற்ற சிலவற்றைக் கேட்பவர் உள்ளத்திற் பதியும்படி எடுத்துரைக்கும் முறையையும் அறியார்; தம்சொற்கள் பயன்படுதலின்றி வீணாகி யொழிதலையுங் கருதார்; ஒன்றைப் புலப்படுத்தும் பொருட்டு இவ்வாறு பலசொற்கள் சொல்லி அவமானப் படும் மாந்தர் உலகிற் பலராவர்.
கருத்து:
நா தினவெடுத்துப் பல சொல்லலாகாது.
விளக்கம்: ‘
காமுறும் இயல்பினர் தேறார், தெளியார், அறியார், இவ்வாறு பல உரைக்கும் மாந்தர் உலகிற் பலர் என்க, பொருள் வளமில்லாமையின், நயனிலாச் சொற்கள் ‘தாறு' எனப்பட்டன. சில சொல்லல் தேறாது பல சொல்லக் காமுறுதலின், 1‘சுனைத்தெழுதல்' என்றார்; ஆற்றல் ஈண்டு ஒழுகுதலென்னும் பொருட்டு!

