ஆதவனே
ஆதவனே.......!
ஆதவனே.....!
நீயும் நானும் ஒன்றுதான்.
உனைக் கண்டு நான்
கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்.
சொல்கிறேன் கேள்...
எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல்
உனக்கு விதிக்கப் பட்ட கடமைகளைத்
தவறாமல் நிதமும் செய்கின்றாய்.
காலையில் இளஞ்சூடாய் இருக்கிறாய்.
உச்சியில் நெருப்பாய்த் தகிக்கிறாய்.
மாலையில் குளிர்ந்து மஞ்சளாய்
கடலில் மூழ்கிப் போகிறாய்.
விடியலில் மறுபடியும் முளைக்கிறாய்.
சலிக்காமல் தினமும் செய்யும்
வழக்கமான ஒன்றினை
வழுவாமல் நாளும் செய்கின்றாய்.
வாழ்த்துக்களும்....வசவுகளும் உன்னை
ஒருபோதும் பாதித்ததில்லை - ஆச்சரியம்தான்.
மேகங்கள் உன்னை மறைக்கலாம்.
காலங்கள் உன்னை கலைக்கலாம். அனால்
உன் கடமையிலிருந்து - நீ
நழுவியதும்மில்லை நடுவில்
நிறுத்தியதுமில்லை.
அப்படித்தான் நானும் ...
காலையில் நானும் சூடாகின்றேன்.
உச்சியில் தகியாய்த் தகிக்கிறேன்.
மாலையில் குளிர்ந்து உறக்கக்
கடலில் மூழ்கிப் போகிறேன்.
விடியலில் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்.
சலிக்காமல் நாளும் கடமையைச் செய்ய
நாயாய் பேயாய் அலைகிறேன்.
அலைக்கழிக்கப்படுகிறேன். - வரும்
வாழ்த்துக்களையும்...வெற்றிகளையும்...
நான் ரசிக்கிறேன்....ருசிக்கிறேன்.
வசவுகளை..... தோல்விகளையும்....
என்னால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை - ஏன்
தாங்கக் கூட முடிவதில்லை.
எதையும் தாங்கும் இதயத்தை
பாகுபாடில்லாமல் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை
உன்னில் கண்டு வியக்கிறேன்.
உனக்கும் மரணம் உண்டாமே....!
எனக்கும் மரணம் உண்டு - அத்தருணம்
வரும் வரை அந்த
எதையும் தாங்கும் இதயத்தை
கடனாய் எனக்குத் தந்திடு.
அங்கு வரும் போது நிச்சயம்
உன்னிடம் திருப்பித் தந்துவிடுகிறேன்.