தேர்ந்தவர்க்குச் செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம் - பழமொழி நானூறு 213

நேரிசை வெண்பா

சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராய்க் கொண்டு தெளியினும் - தேர்ந்தவர்க்குச்
செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
எல்லாம்பொய் அட்டூணே வாய். 213

- பழமொழி நானூறு

பொருளுரை:

தம்மை அடைந்தாராகிய ஒருவரை அவராலடைந்து ஒழுகப்பட்டவர் தொடர்பு இல்லாதவராகக் கொண்டு தெளிய அறியினும் ஆராய்ந்து விட்டு நீங்குதலில்லா வறுமையை நீக்க அறியானாயின் அவனுக்குச் செல்லும் நெறி வேறு யாதுளது?

உணவு அளித்தலை நோக்க, ஏனைய எல்லா அறங்களும் பொய்; சமைத்துச் செய்த உணவை இடுமறமே மெய்யாகும்.

கருத்து:

எல்லா அறங்களுள்ளும் உணவளித்தலே சிறந்த அறமாகக் கருதப்படும்.

விளக்கம்:

தீர்தல் - பற்றுவிடுதல்; தீர்ந்தால் - தொடர்பு இல்லாதவர்கள். தீர்ந்தாராகக் கொண்டு தெளியினும் என்றமையானே, தீராதவர் செல்லல் காணவேண்டும் என்பது பெறப்படும்.

வறுமையைச் 'செல்லாமை' என்றார். தரித்திராத நிலைமையதாயினும், நிற்கும் ஒரு கணத்துள்ளேயே அது செய்யும் கொடுமை நோக்கி. 'என்னுண்டாம்' என்றது, வறியார்க்கு உணவளித்தலே சிறந்தது என வினாவகையால் யாப்பறுத்தவாறாம்.

பொய்யென்றும் 'வாய்' என்றும் கூறியது, ஒன்றனை ஒன்று நோக்கியேயாம். வாய் ஈண்டு உறுப்பை உணர்த்தாது அதனது காரியத்திற்கு ஆயிற்று.

வாய்மையைப் பேசுவதற்கே வாய் என்பது பெயராம். பொய்ம்மையைப் பேசும் உறுப்பைத் 'தோல்' என்பார் ஆசிரியர்கள்.

'எல்லாம் பொய் அட்டூணே வாய்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Nov-22, 6:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே