தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்

1950 களில் தமிழ்த் திரையிசைக்கு உயிரோட்டம் கொடுத்த அரிய பெரிய இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்.

அந்த இன்னிசைக்கு மேலும் மெருகூட்டி அற்புதமான மெட்டுகளிட்டு மக்கள் காதுகளில் தேனாக ஊற்றிய உன்னத இசையமைப்பாளர் ஜோடி எம். எஸ். விஸ்வநாதன் டீ கே ராமமூர்த்தி.

திரையிசைக்கு ஒரு புதிய திசை காட்டி, அவருக்கே உரிய மகத்தான பாணியில் அதை ய்வீகமாகப் படைத்தவர் கே. வி. மகாதேவன்.

மென்மையான குரலில் பாடும் வளம்கொண்டு பூப்போன்ற மென்மையான பாடல்களை மெட்டுக்கட்டி நமக்கு தந்து சென்றவர் ஏ. எம். ராஜா.

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பிரம்மாண்டமான இசையமைத்துவிட்டு டி கே ராமமூர்த்தியிடமிருந்து பிரிந்து தனித்து இசையமைத்து, டிஎம்எஸ்- பி சுசீலா பாடல் ஜோடி மூலம் மக்களின் இதயத்தை தொட்டவர் 'மெல்லிசை மன்னர்' என்று மாபெரும் புகழ் பெற்ற எம். எஸ். விஸ்வநாதன்.

சில படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திடினும், அப்பாடல்களில் மெய்சிலிர்க்க வைக்கும் தேன் சுவையை வழங்கியவர் கோவர்தனன்.

கல்யாண ஊர்வலம், அவன் பித்தனா , பால் மனம் போன்ற சில படங்களுக்கு மட்டுமே அழகான மெட்டுக்களைப் படைத்து மாயமான விந்தை இசையமைப்பாளர் பார்த்தசாரதி.

'மேஜர் சந்திரகாந்த்' திரைப்படத்திற்கு மிகவும் ரசிக்கும்படியான வெற்றிப் பாடல்களை படைத்து, பின்னர் வேறு பல திரைப்படங்களுக்கும் அவரது தனிப்பாணியில் இசையமைத்தவர் வி. குமார்.

பெரும் அளவில் மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்து கிட்டத்தட்ட பத்து தமிழ் படங்களில் தரமான இனிமையான பாடல்களை நமக்கு வழங்கியவர் ஜி. தேவராஜன்.

பிறர் இசையமைத்த பிரபலமான ஹிந்தி திரைப்படப் பாடல் மெட்டுக்களை அப்படியே நகல் எடுத்து தமிழ் திரைப்பாடல்களாக தந்தவர் வேதா.

மேற்கத்திய இசைத்தழுவிய மெட்டுக்களிட்டு சில ஜனரஞ்சகமான பாடல்களை அளித்த இசையமைப்பாளர்கள் ஜோடி சங்கர்-கணேஷ்.

சுமார் பத்து தமிழ் படங்களுக்கு இசையமைத்து முத்துப் போன்ற சில பாடல்களை தந்தவர் கன்னட சினிமா இசையமைப்பாளர் விஜயபாஸ்கர்.

எதற்கு வந்தார்கள் என்ன செய்தார்கள் எங்கே சென்றார்கள் என்ற வரிசையில் இருந்த சில இசையமைப்பாளர்கள், சிதம்பரநாதன், தாராபுரம் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த், ராமானுஜம், அம்சலேகா, டி. எம். சௌந்தரராஜன்.

எம் எஸ் விஸ்வநாதனை இமயத்திலிருந்து இறக்கி, அவரை பரங்கி மலையில் வைத்துவிட்டார் என்றால் அது மிகையாகாது, ஆம் அப்படி ஒரேடியாக எம்எஸ்வியை கீழே தள்ளியது இசைஞானி இளையராஜா.

இவரைவிட்டால் மீதி எல்லோருமே கூஜா என முடிசூடா மன்னனாக இருந்த இசைஞானியையே திகைக்கவைத்து அவரை ஓரளவுக்கு பின்னும் தள்ளிய நவீன இசையின் இளவரசன் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்.

கடந்த இருபது ஆண்டுகளில் இன்னும் எவ்வளவோ புதிய இசையமைப்பாளர்கள் சிலர் வித்யா சாகர், யவன்ஷ்ங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜீ வி பிரகாஷ், அனிருத், இம்மான் போன்றவர்கள்.

கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்கள் எழுபதுக்கும் மேலிருக்கும், அவர்கள் மெட்டமைத்து பாடங்கள் ஏழாயிரத்திற்கும் மேலிருக்கும்.

ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு திறமை மற்றும் கற்பனை சக்தி, அனைவரும் அவர்களுக்குரிய வகையில் பாடல்கள் பல அள்ளித்தந்தனர், தந்துகொண்டும் இருக்கின்றனர்.

ஆயினும், என்னைப் பொறுத்தவரையில் இந்த எழுபது ஆண்டுகளில் தலைசிறந்து விளங்கும் இசையமைப்பாளர் யார் என்றால் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்தான் என்பேன்.

'துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே' என்ற அந்தக்காலத்து பிரபல பாட்டுக்கு மெட்டமைத்து, 'அச்சம் என்பது மடமையடா' என்று மக்களுக்கு வீரஉணர்ச்சியூட்டி, 'என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்' என்ற துள்ளம் பாடலை கொடுத்து, கர்ணன் படத்தில் காலத்தால் அழிக்கமுடியாத முத்துமுத்தான பாடல்களை அளித்து, 'கண்போன போக்கிலே கால் போகலாமா' ' காற்று வாங்க போனேன்' 'பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்' 'மாதவி பொன்மயிலாள்' 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' ' ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக' ' முத்துக்களோ கண்கள்' ' பூ மாலையில் ஓர் மல்லிகை' 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா' 'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா' ' சிற்பி இருக்குது முத்து இருக்குது' 'இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ' 'தங்கத்தில் முகமெடுத்து' 'அந்தமானை பாருங்கள் அழகு' இதுபோன்ற ஆயிரக்கணக்கான மணிமணியான பாடல்களை , பல வருடங்களுக்கு பிறகு கேட்டாலும் , தெவிட்டாமல் இனிக்கும் தேனாக படைத்த எம்எஸ்வி ஒரு அற்புதமான இசையமைப்பாளர் மட்டும் அல்ல, எளிமை, பணிவு, அசாத்திய உழைப்பு இவை அனைத்தை விட, மற்ற இசையமைப்பாளர்களை போற்றும் பெருந்தன்மை கொண்ட மாமனிதர்.

ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் மெல்லிசை மன்னர் காலத்தால் அழிக்கமுடியாத தமிழ்த் திரையிசையின் மெல்லிசை மாமனிதர்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Nov-22, 4:12 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 95

மேலே