மலைத்தழுது உண்ணாக் குழவியைத் தாயர் அலைத்துப்பால் பெய்து விடல் - பழமொழி நானூறு 212
இன்னிசை வெண்பா
உலப்பில் உலகத்(து) உறுதியை நோக்கிக்
குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்
மலைத்தழு(து) உண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப்பால் பெய்து விடல். 212
- பழமொழி நானூறு
பொருளுரை:
அழிவில்லாத உலகத்து அடையும் உறுதியாகிய நன்மையை நோக்கி நல்ல அறநெறியைக் கைக்கொள்ளாதாரை அந் நெறியினின்றும் நீக்கி அடக்கி அறநெறியைக் கொள்ளுமாறு அறிவு கொளுத்துதல்,
மாறுபட்டு அழுதுகொண்டு பாலுண்ணாத குழந்தைகளை தாய்மார்கள் வருத்திப் பால் உண்பித்தலை யொக்கும்.
கருத்து:
அறிவுடையோர், அஃதிலராகித் தீநெறியிற் செல்லும் மடவோரை அடக்கி அறிவு கொளுத்துக.
விளக்கம்:
'குலைத் தடக்கி' என்றது, அவர்கள் நன்மை யெய்தும் பொருட்டு வருத்துதலின் குற்றமின்று எனப்பட்டது.
'மலைத்தழுது உண்ணாக் குழவியைத் தாயர் அலைத்துப்பால் பெய்து விடல்' என்பது பழமொழி.