செவ்வியர் அல்லார் செவிகொடுத்துங் கேட்கலார் – நாலடியார் 322
இன்னிசை வெண்பா
அவ்வியம் இல்லார் அறத்தா(று) உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றா(து) ஆங்கு 322
- புல்லறிவாண்மை, நாலடியார்
பொருளுரை:
தோலைக் கவ்வித் தின்னும் புலையருடைய நாய்கள் பாலடிசிலின் நன்மையைத் தெரிந்து கொள்ளாமை போல, அழுக்காறு முதலிய மனமாசுகள் இல்லாதவர் அறநெறி அறிவுறுத்தும் போது நல்லறிவில்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்துங் கேட்க மாட்டார்.
கருத்து:
புல்லறிவுடைய கீழ்மக்கள் சான்றோர் அறிவுரைகளை ஏற்க மாட்டார்.
விளக்கம்:
உரைக்குங்கால் என்று நிகழ்கால வினையாற் கூறினார், அஃதவர்க்கு "முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை" ஆதலின், அஃது அவர்பால் அல்லாதார்க்குள்ள அழுக்காற்றையுங் குறிப்பால் உணர்த்திற்று.
செவிகொடுத்தும் என்றார், அற விலக்குதல் பற்றி,
குணுங்கர், புலையராதல் திவாகரத்திற் காண்க. ‘செவ்வி' என்றது, அதன் நன்மையை!