ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு – நாலடியார் 321
நேரிசை வெண்பா
அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; - பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு 321
- புல்லறிவாண்மை, நாலடியார்
பொருளுரை:
அருள் காரணமாக அறம் அறிவுறுத்தும் அன்புடைய பெரியோரது வாய்மொழியை அறிவுடையோர் பெரும் பயனுடையதாக மதித்தேற்றுக் கொள்வர்; ஆனால் அகப்பை பாலடிசிற் சுவையுணராமை போல ஒரு பொருளாகக் கருதற்கில்லாத அறிவிலான் அவ்வாய் மொழியை மதியாது இகழ்ந்துரைப்பான்.
கருத்து:
புல்லறிவாளர் நல்லோர் பொருளுரையை மதியாது ஒழுகுவர்.
விளக்கம்:
அன்பிருந்தாலன்றி அருள் பிறவாதாகலின், அருளோடு அன்பும் உரைக்கப்பட்டது. பொதுவாக அறிஞரென்றற்கு ஈண்டுப் ‘புலவர்' எனப்பட்டது;
அகப்பை சுவையுணராமை போல, அறிவிலான் அன்புடையார் வாய்ச்சொல்லின் பெருமையுணரான் என்க.
உவமை: ஏழைக்கு உணரும் இயல்பில்லாமை உணர்த்திற்று; காரணம் புல்லறிவின் இயல்பு அத்தகையது.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
