இன்னிசை இருநூறு - வாழ்த்து 4

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

அக்காலத்தில் இக்கவிகளையெல்லாம் கேட்ட கந்தசாமிக் கவிராயர், இவைகள் பெரிதும் பயன் தரவல்லன என்று கருதி, 200 வெண்பாக்களைத் தொகுத்து, இயன்றவரை பொருட்பொருத்தம் நோக்கி, 20 அதிகாரமாகச் செய்து இன்னிசை இருநூறு என்ற பெயருடன் 1904 ல் விவேகபாநு 4 வது தொகுதியில் வெளியிட்டார்.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த நான்காம் பாடலின் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

பாடல் 4:

நாமகட் போற்றுதூஉம் நாமகட் போற்றுதூஉம்
தோமி லிறைவ னடிப்புணையாற் றுன்பமெனும்
நாமக் கடனீந்த நல்லறிவு மீகானை
ஏம மெனவீத லின். 4

தோம் – குற்றம், நாமம் - அச்சம்

புரிந்து கொள்ள எளிமையாக சந்தி பிரித்து இப்பாடல்:

நாமகள் போற்றுதூஉம் நாமகள் போற்றுதூஉம்
தோம் இலி இறைவன் அடிப்புணையால் துன்பமெனும்
நாமக் கடனீந்த நல்லறிவு மீகானை
ஏமம் என ஈதலின். 4

தெளிவுரை:

நாமகள் எனப்படும் கலைகளுக்கு அதிபதியான தெய்வத்தைப் போற்றுகின்றேன். துன்பம் துயரம் என்கின்ற அச்சங்களை உடைய வாழ்க்கை என்னும் கடலினை, குற்றம் இல்லாத, இறைவனுடைய பாதங்களாகிய தெப்பத்தை உதவியாகக் கொண்டு நீந்திக் கடக்கும்படி உதவுகின்ற, நல்ல அறிவாகிய மாலுமியினைப் பாதுகாவலுடன் கூடிய வலிமையாக எனக்குத் தந்துள்ளதன் காரணமாக நாமகள் எனப்படும் கலைகளுக்கு அதிபதியான தெய்வத்தைப் போற்றுகின்றேன் என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (7-Nov-22, 4:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே