இன்னிசை இருநூறு - வாழ்த்து 3

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.
அக்காலத்தில் இக்கவிகளையெல்லாம் கேட்ட கந்தசாமிக் கவிராயர், இவைகள் பெரிதும் பயன் தரவல்லன என்று கருதி, 200 வெண்பாக்களைத் தொகுத்து, இயன்றவரை பொருட்பொருத்தம் நோக்கி, 20 அதிகாரமாகச் செய்து இன்னிசை இருநூறு என்ற பெயருடன் 1904 ல் விவேகபாநு 4 வது தொகுதியில் வெளியிட்டார்.
இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.
இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த மூன்றாம் பாடலின் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
பாடல் 3:
அங்கண் விசும்புமுத லைந்தொடு பல்லுயிரைச்
செங்கதிர்ச் செல்வனைத் திங்களைப் போற்றுதூஉம்
எங்கும் நிறைந்தொளி ரீறி லிறைவற்குத்
துங்க வடிவாத் துணிந்து. 3
புரிந்து கொள்ள எளிமையாக சந்தி பிரித்து இப்பாடல்:
அங்கண் விசும்புமுதல் ஐந்தொடு பல்லுயிரைச்
செங்கதிர்ச் செல்வனைத் திங்களைப் போற்றுதூஉம்
எங்கும் நிறைந்தொளிரி, ஈறு இலி இறைவற்குத்
துங்க வடிவாத் துணிந்து. 3
பொருளைப் புரிந்து கொள்ள கீழேயுள்ளவாறு கூட்ட வேண்டும்.
விசும்புமுதல் ஐந்தொடு
அங்கண்
எங்கும் நிறைந்தொளிரி,
ஈறு இலி இறைவற்குத்
துங்க வடிவாத் துணிந்து
பல்லுயிரைச்
செங்கதிர்ச் செல்வனைத் திங்களைப் போற்றுதூஉம்!
தெளிவுரை:
ஆகாயம் முதலான ஐம்பூதங்களையும், அவற்றை இடமாகக் கொண்டு, அண்டசராசரம் எனப்படும் எல்லா இடங்களிலும் நீக்கமற ஒளிர்ந்தவண்ணம் நிறைந்திருக்கும் முடிவில்லாத இறைவனுக்கும் அவனது விரிவுக்கும், உயர்வுக்கும், தூய்மைக்கும் பெருமைக்குமான வடிவங்களாக, பலவகைப்பட்ட உயிரினங்களையும் சிவந்து கொதிப்பின் அடையாளத்துடன் தோன்றும் சூரியனையும், குளிர்ச்சி காட்டும் நிலவினையும் புகழ்ந்து பாடிக்கொள்கிறேன் என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.
செங்கதிர்ச் செல்வன் - சூரியன், திங்கள் - நிலவு
விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்.