425 யாக்கை இறப்பதற்கு எல்லை இல்லை - யாக்கை நிலையாமை 7
அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
முற்றியபின் கனியுதிரும் பழுப்புற்றுத் தழையுதிரும்
..முழுது மேநெய்
வற்றியபின் விளக்கவியு மென்னவோர் திடமுண்டு
..மக்கள் காயம்
பற்றியவக் கருப்பத்தோ பிறக்கும்போ தோபாலப்
..பருவத் தோமூப்
புற்றபின்போ வீழ்வதென நிலையின்றே லிதன்பெருமை
..யுரைப்ப தென்னே. 7
- யாக்கை நிலையாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”முதிர்ந்த பின்புதான் பழம் உதிர்ந்து விழும். இலை முற்றிப் பழுப்பாகி உதிரும். முழுவதும் நெய் எரிந்து வற்றிய பின் விளக்கு அணையும் என்று உறுதியாகக் கூறலாம்.
ஆனால் மக்கள் உடம்பு தோன்றிய கருவிலோ, பிறக்கும் பொழுதோ, இளமைப் பருவத்திலோ, முதிர்ந்த பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் இறக்கலாம். வாழ்வு நிலையில்லை.
ஆதலால், இவ்வுடலின் பெருமையை என்ன சொல்வது?” என்கிறார் இப்பாடலாசிரியர்.
தழை - இலை. திடம் - உறுதி. காயம் - உடம்பு. வீழ்வது - இறப்பது.