424 நம்முயிர் கொள்ளக் காலம் பார்க்கமாட்டான் நமனே - யாக்கை நிலையாமை 6

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

நெல்லறுக்க வோர்கால மலர்கொய்ய வோர்காலம்
..நெடிய பாரக்
கல்லறுக்க வோர்கால மரமறுக்க வோர்காலக்
..கணித முண்டு
வல்லரக்க னனையநம னினைத்தபோ தெல்லாநம்
..வாழ்நா ளென்னும்
புல்லறுக்க வருவனெனில் நெஞ்சமே மற்றினியாம்
..புகல்வ தென்னே. 6

- யாக்கை நிலையாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மனமே! உலகில் நெல் அறுப்பதற்கும், பூப்பறிப்பதற்கும், உயர்ந்த மலைக் கல்லை வெட்டுவதற்கும், மரத்தை அறுப்பதற்கும் ஒவ்வோர் காலக் கணக்கு உண்டு.

மிகக் கொடிய அரக்கரை யொத்த எமன் நினைத்த பொழுதெல்லாம் நம் வாழ்நாள் என்ற புல்லை அறுக்க வருவான். அதனால், இனி வேறு நாம் சொல்ல என்ன இருக்கிறது?” என்கிறார் இப்பாடலாசிரியர்.

நமன் - எமன். வாழ்நாள் - ஆயுள்.
புகல்வது - சொல்வது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Nov-22, 6:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே