இப்படித்தான் ஆரம்பம்
#இப்படித்தான் ஆரம்பம்
பள்ளி இறுதி ஆண்டு
முடித்த பின்னாளில் ஓர்நாள்
தந்தையின் துர்மரணம்
சொந்தங்கள் விலகி ஓட
துன்பங்கள் ஒட்டிக்கொள்ள என்று
இப்படித்தான் ஆரம்பமானது
கவலைகளும் கண்ணீரும்..!
கல்லூரிப் படிப்பு கனவில் கரைய
சுருக்கெழுத்தும்
தட்டெழுத்துமாய் கைகொடுக்க என்று
இப்படித்தான் ஆரம்பமானது
பணிபுரிதலும், பணம் ஈட்டலும்..!
தபால் படிப்பு பட்டமளிக்க
தனியார் பணி அனுபவமிருக்க
இலஞ்சமற்ற அரசுப்பணியில்
சிபாரிசுகள் ஏதுமின்றி என்று
இப்படித்தான் ஆரம்பமானது
அரசுப் பணியும் ஆனந்தமும்..!
பணம் ஈட்டியும் என்ன??
முளைவிடத் துவங்கிய பிரச்சினைகள்
எண்ணிப் பார்க்கையில்
எண்ணிக்கையில் அடங்கவில்லை..
மனதை அமைதி படுத்த என்று
இப்படித்தான் ஆரம்பமானது
அதீத இறைவழிபாடும் தியானமும்..
இப்படியான ஆரம்பங்களின்
முடிவில் எல்லாம்
வெற்றி உற்று நோக்குவதை
தன்னம்பிக்கையும் உழைப்பும்
அறிந்து வைத்திருந்ததை
நானும்தான் அறிந்து வைத்திருக்கிறேன்..!
-சொ.சாந்தி-