இணையம்
இணையம் (ஒலிப்பு) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பரிமாற்றம் (பாக்கெட் சுவிட்சிங்) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். உலகளாவிய வலை என்பது உலகளாவிய முறையில் இணைப்புற்ற கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு, உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு மீயிணைப்புகள் மூலம் உலவல் வழி தொடர்புபடுத்தப்பட்ட இணைய தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்றது.
வரலாறு
1950-ம் ஆண்டிற்கு அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயனர்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவணம் செய்ய வேண்டும் என எண்ணினர். இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள், வரிசைப்படுத்துதல் முறைகள், மற்றும் தரவுப்பொதி நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினர்.
ஜே.சி.ஆர்.லிக்லைடர் இணையத் தந்தையாக அறியப்படுகிறார் இணையம் - இன்று ஒரு தகவல் பரணிடப்பட்டது 2011-01-10 at the வந்தவழி இயந்திரம்
முதலாவது முறையிலமைந்த வலையமைப்பானது ஐக்கிய அமெரிக்காவின் நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் ஜனவரி 1 1983 முதல் இயங்க ஆரம்பித்தது.
1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இக்காலப்பகுதியில் உருசியாவில் உள்ள சேர்னோபில் அணுஆலை வெடிப்பு மக்களை விஞ்ஞானிகள் ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது. பிரான்ஸ் ஸ்விட்சலாந்து எல்லையிலிருந்த சேர்னோபிலில் உலகளாவிய வலை பிரசித்தமடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டிம் பேர்ணர்ஸ்-லீ எச்டிஎம்எல் மெருகூட்டும் மொழி, எச்டிடிபீ என்னும் அனுமதிக்கப்பட்ட அணுகுமுறைகளை கொண்ட புதிய அணுஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் ( சேர்ண்) இணைய தளமானது உருவாக்கப்பட்டது.
ஜூன் 30 2006-ல் உலகம் முழுவதும் நூறு கோடி மக்களுக்கும் மேல் இணையத்தை உபயோகம் செய்கிறார்கள்.
இணையத்தின் தோற்றம்
1957-ஆம் ஆண்டில் அன்றைய சோவியத் யூனியன் ஸ்புட்னிக் என்னும் ஆளில்லா செயற்கைக் கோளை விண்ணில் பறக்கவிட்டது. இது தமக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கான ஆய்வாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உண்டாகியது. விண்வெளி ஆய்வில் தாம் பின்தங்கிவிடக் கூடாது என்கிற அக்கறையும் அவாவும் அமெரிக்காவுக்குப் பிறந்தது. எனவே, அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர், உடனடியாக ஓர் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆணை பிறப்பித்தார். அந்த ஆய்வமைப்பு ‘ஆர்ப்பா’ எனப்பட்டது.
’ஆர்ப்பா’வின் முதன்மைக் குறிக்கோள் சோவியத் யூனியனைப் போன்று விண்கலனை ஏவிப் பரிசோதனை செய்வதேயாகும்.அடுத்த ஆண்டான 1958-இல் அமெரிக்காவின் ‘எக்ஸ்புளோரர்’ விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதே வேளையில் அமெரிக்க இராணுவப் பாதுகாப்புத் துறையில் தகவல் தொடர்புக்குக் கணினியைப் பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விண்வெளிப் பயண ஆய்வில் ஈடுபட்டிருந்த ’ஆர்ப்பா’ ஆய்வு மையத்திடம் அமெரிக்க இராணுவத் துறையில் கணினியின் பயன்பாட்டை மேம்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டது. 1962-இல் டாக்டர் ஜே.சி.ஆர்.லிக்லைடர் தலைமையில் இப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
கணினிப் பிணையங்கள், கணினி வழியான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் ’ஆர்ப்பா’ முதலில் கவனம் செலுத்தியது. ஒரு புதுவகையான கணினிப் பிணையத்தை நிறுவுவது ‘ஆர்ப்பா’வின் தொடக்கத் திட்டமாக இருந்தது. அயல்நாட்டுடன் போர்மூண்டு, எதிரிகளின் குண்டு வீச்சில் பிணையத்தின் ஒருபகுதி சிதைக்கப்பட்டாலும் பிணையத்தின் மீதிப் பகுதி எவ்வித பாதிப்புமின்றிச் செயல்பட வேண்டுமென எண்ணினர்.
1965-இல் அதற்கான ஒரு மாதிரிக் கட்டமைப்பை வெளியிட்டது. இதே கோட்பாடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1968-இல் இங்கிலாந்து நாட்டின் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் (National Physics Laboratary) இதுபோன்ற பிணையத்தின் மாதிரியைச் சோதனை முறையில் அமைத்துக் காட்டியது.
இத்தகைய ஆய்வுகளின் இறுதியில் ‘ஆர்ப்பா’வின் முயற்சியால் 1969-இல் இராணுவப் பயன்பாட்டுக்கென அமெரிக்காவில் நான்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த கணினிப் பிணையங்கள் இணைக்கப்பட்டு ‘ஆர்ப்பாநெட்’ என்கிற அமைப்பு நிறுவப்பட்டது. இதுவே, பிற்கால இணையத்தின் முன்னோடிப் பிணைய அமைப்பாகும்.
இந்த சூழலில் பாஸ்டன் நகரின் எம்ஐடீயில் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவர் லியோனார்டு கிளெய்ன்ராக் என்பார் ஆர்ப்பாநெட்டின் மூலமாக இரு சேய்மைக் கணினிகளுக்கிடையே முதல் தகவல் பரிமாற்றத்தை நடத்திக் காட்டினார். இதனால் இவர்,’இணையத்தின் தந்தை’ (Father of Internet) என்று அழைக்கப்படுகிறார்.