நம்பிக்கை மாறும் நேரம்

நம்பிக்கை மாறும் நேரம்

சிதம்பரத்துக்கும் சாரதாவிற்கும் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆனபின் குழந்தை ராம் பிறந்தான்.அவர்களது செல்ல மகனாக அவன் வளர்ந்து வீட்டில் மகிழ்ச்சியை உண்டாக்கினான்.படிக்கும் வயது வந்தவுடன் அவன் ஒரு பள்ளியில் சேர்ந்து முதல் ஐந்து வகுப்புகளை முடித்ததும்,அவனைச் சிதம்பரம் ஒரு பெயர்பெற்ற பள்ளியில் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கும் வகுப்பில் சேர்த்தார். அவனும் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்தான். பின் சென்னையில் பிரபலமான கல்லூரியில் சேர்ந்து மேல் படிப்பை தொடர்ந்து பட்டமும் பெற்றான்.
ராம், பட்டப் படிப்பை முடித்த பின் மேலும் படிக்க ஆசை இருந்தாலும் படிக்கவில்லை.. அப்பாவின் திடீர் மரணம் அவனை கவலை அடைய செய்து எவ்வாறு வாழ்க்கையை தொடரப்போகிறோம் அம்மாவை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற சிந்தனைகள் , மேலும் கூடுதலாக அவர் வாங்கி வைத்துள்ள கடன்கள். சினிமா கதைகளில் வருவது போல கடன் வாங்கியவர்கள் யாரும் வந்து சாமான்களைத் தூக்கி எறியவில்லை மிரட்டவும் இல்லை இருந்தாலும் வாங்கிய கடனை திரும்ப அடைக்கத் தானே வேண்டும்..
இவ்வாறு மனது குழம்பி இருக்கும் வேளையில் தான் கேரளாவில் இருந்து வேலை ஒன்று கிடைத்தது. முதன் முறையாக அவன் சென்னையை விட்டு செல்கிறான்.. எண்ணற்ற கனவுகள் அவனிடம், சிலர், அங்கே போய் வாழ்வில் வென்றும் இருக்கிறார்கள்.. பலர் வீழ்ந்தும் இருக்கிறார்கள்.. அந்த வென்றவரின் வரிசையில் சேர வேண்டும் என்று எண்ணி ராம் தனது முதல் பயணத்தை கேரளா நோக்கி செல்லவிருந்தான். தெரிந்தவர் பலரும் அவனிடம் டேய், அங்கே போய் வேலை பார்த்தா காசு கொஞ்சம் அதிகமாக கிடைக்கும், உன் உடம்புக்கும் மனதுக்கும் பிடிக்கும் உன்னை நம்புபவர்கள் நிரம்பிய இடம் என அவனுக்கு அறிவுரை கூறினர். உன் கடனையும் சீக்கிரம் அடைச்சிடலாம்.. இங்கேயே 100, 200 னு எவ்வளவு நாள் போராடி கொண்டு இருப்பே கொஞ்சம் வெளியேபோ நல்லா சம்பாதி, பிறகு ஊருக்கு வந்து உன் அம்மாவை நல்லபடியா பார்த்துக்கலாம்.. உன்னை பாத்துக்கவும் ஒரு பெண்ணை அங்கேயே பார்த்து திருமணம் முடிச்சிகோ என்று புன்முறுவலுடன் சொன்னார்கள்.

இந்த செய்திகள் எல்லாம் ராமை ஊக்கமடைய செய்தன. , அம்மாவிடம் சொல்ல தயங்கி ஒரு வழியாக சொல்லிய போது அம்மா உடனே "வேண்டாம்பா இவ்வளவு நாள் நமக்கு படியளந்த அந்த இறைவன் இன்னமும் கொடுக்காமலா போய்டுவான்... " என்று அம்மா சிறிது கண்ணீருடன் சொல்லிட, ராம் சிறிது வாட்டமுற்றான். அம்மா சொன்னதை மனதில் இருந்து நீக்கிவிட்டு மாலை எர்ணாகுளம் ரயிலில் ஏறி காலையில் கேரளா வந்து இறங்கினான். ராம் கூட அவன் நண்பன் ரமேஷும் வந்திருந்தான்.
எர்ணாகுளத்தில் இறங்கியவுடன் கடிதத்தில் வந்த விலாசத்தைக் காட்டிட அங்கு ஒருவர் இவன் கொடுத்த விலாசத்தை ஆராய்ந்து பார்த்து, வழி சொல்ல அவர் சொல்லியபடி தடுமாறாமல் ஒரு வழியாக அதில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அது ஒரு பெரிய மில்.. முதலாளி பெயர் நித்தின் மேனன்... பார்க்க மிக நல்லவராகவே தெரிந்தார். அவரிடம் அறிமுகம் ஆகி, தங்களைப் பற்றி சொல்லி வேலையில் சேர்ந்தனர்.. அவர்களுடைய வேலை காப்பிக் கொட்டை, தேயிலை போன்றவற்றை அந்த பெரிய மில்லில் அரைத்து மற்றும் அதனை சுத்தம் செய்து பின்னர் அதைப் பையில் போட்டு வைப்பது. அங்கு வேலை செய்த ஆட்கள் சொல்லிக் கொடுக்க ராமும், ரமேஷும் அதைப் பற்றி புரிந்து கொண்டு நன்றாகவே வேலை செய்தனர்.

இருவரும் நன்றாக வேலை செய்வதை கண்டு முதலாளிக்கும் இவர்களுக்கும் நெருக்கம் கொஞ்சம் அதிகமானது. இப்படி, நன்றாகவே வாழ்க்கை போய் கொண்டு இருந்தது.. ராம் இவ்வளவு நாள் கண்ட கனவு விரைவில் நனவாகும் என்று எண்ணி நாட்களை ஓட்டிக் கொண்டு இருந்தான். அவ்வப்போது, அம்மாவிடம் தொலை பேசியில் பேசவும் செய்தான். விரைவில் ஊருக்கு வந்து போவதாகத் தெரிவித்தான். ஒரு நாள் அந்த மில்லுக்கு புதிதாக காப்பிக் கொட்டை அரைக்க மிஷின் ஒன்றை பம்பாயில் இருந்து வாங்கி கொண்டு வந்து அவர்கள் ஆலையில் பொறுத்தும் பணியில் ஈடு பட்டு கொண்டு இருந்தனர்.

ராம் , ரமேஷ் இருவரும் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தனர், இரவில் வேலை முடிய முதலாளி நிதின் பார்த்துவிட்டு இருவரையும் பாராட்டினர்..

நாளைக்கு நல்ல நாள் இந்த மெஷின் வேலை செய்வதற்கு முன்னால் அதற்கு பூஜை பண்ணிட்டு வேலையை ஆரம்பிப்போம்என்று அவர் கூறிட .. அடுத்த நாள் "பூஜை முடிய நிதின் ராமிடம் இங்க பாரு ராம் இந்த பம்பாய் பசங்க எங்கே இருக்காங்க அவங்களை மிஷின் உள்ளே சென்று அந்த பிளேடு, சூட் மற்ற எல்லாத்தையும் நல்லா துடைக்கச் சொல்லு.." ஐயா... புது மெஷின் தானே.. நல்லாத் தானே இருக்கும்... இல்ல ராம் நம்ம பொருள் எல்லாம் ஏ 1 குவாலிட்டியாக இருக்க வேண்டாமா இந்த மெஷினும் அதன் உள்ளே வைத்து பொருந்தியுள்ளவை யாவும் எங்க எங்க தயாரிச்சானோ.? அவங்களிலே ஒரு பையனை விட்டு நல்லா கிளீன் பண்ணிட்டு என்ன வந்து பாரு என சொல்லிவிட்டு சென்றார். ராம் காலை வந்தவுடன் பம்பாய் பசங்களை தேடினான்.. அவர்கள் அனைவரும் காலை உணவை சாப்பிட சென்று விட்டனர்.. வேலை முடிய வேண்டும் என்று ராமே உள்ளே இறங்கி சுத்தம் செய்து கொண்டு இருந்தான். அப்போது அங்கே வந்த நிதின் மெஷினை ஆன் செய்தார் ராம் உள்ளே இருந்து கத்தினான்.. நான் உள்ளே இருக்கேன் மெஷினை ஆப் பண்ணுங்க என்று அவன் கத்தியது யாருக்கும் கேட்க வில்லை.அந்த மெஷினின் புதிய பிளேடுகள் ராமை சீவிட அந்த இடம், மற்றும்மெஷின் முழுவதும் ரத்தம் வழிந்தோடியது..

அங்கு வேலையாட்களின் கூட்டம் கூட , முதலாளி ஒன்றும் அறியாதவனைப் போல அங்கு வந்து பார்த்தார் ராம் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
ரமேஷ். ராமின் ரத்தம் தோய்ந்த உடலை நெஞ்சோடு சேர்த்து வைத்து அழுது கொண்டு இருந்தான்.. முதலாளி நித்தின் குற்ற உணர்ச்சியில் துடித்துடித்தார்.
ராமின் அம்மாவிற்கு தகவல் சொல்லலாம் என்றால் அவள் நிச்சியம் இந்த செய்தியை தாங்காமல் தன்னை மாய்த்து கொள்வாள் என்ற கவலையால் அவளுக்கு சொல்லாமல் கேரளவிலேயே அவனை அடக்கம் செய்து விட்டு ஒரு பத்து நாட்கள் இருக்கும், ரமேஷ் ஊருக்கு கிளம்ப ஆயத்தம் செய்து கொண்டு இருந்தான்.. முதலாளி நிதின்... ரமேஷிடம்...இங்க பாருப்பா... இதுல 10 லட்சம் பணம் இருக்கு இதை ராமின் அம்மாவிடம் கொடுத்து விடு என அவர் சொன்னதும் , எதுக்கு சார் இதெல்லாம் ஏதோ அவன் கெட்ட நேரம் அவன் உள்ளே இருக்கும் போது யாரோ தெரியாம மெஷினை போட்டுட்டாங்க அவன் கத்தினதும் மெஷின் சத்தத்தில் யாருக்கும் கேட்கலே என அவன் கூறிட .
அய்யோ இல்லை ரமேஷ் அந்த மிஷின் போட்டது நான் தான் என அவர் கூறியதும் ரமேஷ் அதிர்ந்து என்ன என்று கேட்க, எனக்கு தெரிஞ்ச மலையாள மாந்திரீகர் ஒருத்தர் புது மஷின்லெ ரத்தத்தை காணிக்கையாக்கி துவங்கினா நல்ல லாபம் கிடைக்கும் யாருடைய கண்ணும் படாமல் நீங்கள் வாழலாம் என்று சொன்னார்.அதுனால அப்படி பண்ணிட்டேன்.
சத்தியமா உள்ளே ராம் இருக்கான்னு எனக்கு தெரியாது தெரிஞ்சா மெஷினைப் போட்டு இருக்க மாட்டேன்.. நான் அவனை அந்த பம்பாய் பசங்களைத் தான் இறக்க சொன்னேன். இவன் உள்ளே போனது எனக்கு தெரியாது.என்னை மன்னிச்சுடு ரமேஷ் இதை வாங்கிக்கோ என்றார். சார் போதும் நிறுத்துங்க உங்க மேல நாங்கள் இருவரும் நிறைய மரியாதை வச்சு இருந்தோம். இப்போ அதெல்லாம் மறைந்து விட்டது. உங்களைப் பார்க்கவே முடியவில்லை.
ராம் இல்லை பம்பாயில் இருந்து இங்கே வந்துள்ள பசங்கள் உயிரானாலும் உங்களுக்கு என்ன துச்சமா தெரியுதா.
நீங்க உங்க தலைமுறை நன்றாக இருக்க அடுத்தவன் வம்சத்தையே அழித்து விட்டீர்களே சார்.போதும் சார் உங்க சகவாசமும் , ஊரும்,காசும். நான் எங்க ஊர்ல பட்டினி கிடந்தாக்கூட ராஜாவாகத் தான் இருப்பேன். இந்தாங்க பிடிங்க உங்க பணத்தை. நீங்க செய்த பாவத்துக்குக் கடவுள் கண்டிப்பா ஒரு தண்டனை சீக்கிரமே கொடுப்பார் என்று சிறிது குரலை உயர்த்திக் கூறினான்.
சார் நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம் நாங்க கேஸ் ஏதும் போட மாட்டோம் அப்படியே போட்டாலும் எங்களுக்கு தெரியும் நீங்க பணத்தைக் கொண்டு எப்படியாவது வெளியே வந்து விடுவீங்க என்று. நீங்க நல்லா சுகமாக இருங்க இனிமேலாவது மந்திரவாதி சொல்லுகிறான், மாந்த்ரீகன் சொல்றான்னு யாருடைய உயிரையும் எடுத்துடாதீங்க என்று ரமேஷ் கூறிவிட்டு தனது ஊரை நோக்கி பயணமானான் சாமான்களுடன் மனதில் மிகுந்த துயரத்தையும் கவலைகளையும் சுமந்து கொண்டு.

எழுதியவர் : கே என் ராம் (1-Apr-25, 5:39 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 14

மேலே