429 இறப்போர்க் கண்டும் மெய் எண்ணாய் நெஞ்சே - யாக்கை நிலையாமை 11
அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)
விரியாழி நுண்மணலைத் தாரகையை யெண்ணிடினும்
..வீந்தோர் தம்மைச்
சரியாவெண் ணிடத்தகுமோ இன்னமுநங் கண்முன்னஞ்
..சாவோர் தம்மைத்
தெரியாது போல்தினமும் வீண்காலங் கழிக்கின்றாய்
..திடமா யென்று
மரியாமை யுற்றனையோ அறியாமை பெற்றனையோ
..வழுத்தாய் நெஞ்சே. 11
- யாக்கை நிலையாமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மனமே! விரிந்த கடலின் கரையில் காணும் நுண்ணிய மணலை, விண்மீன்களை எண்ண முடிந்தாலும், இறந்தோர்களைச் சரியாக எண்ணிக் கணக்கிட முடியுமோ?
மேலும் நம் கண் முன்னால் நன்றாக உடனிருந்தார் மாண்டு ஒழிவதைப் பார்த்தும் தெரியாதது போல் நாளும் வீண் காலம் போக்குகின்றாய்.
எந்நாளும் உறுதியுடன் இறவாதிருக்கும் நிலை பெற்றாயோ அல்லது ஆராய்ச்சியறிவு அற்ற னையோ? கூறு” என்கிறார் இப்பாடலாசிரியர்.
ஆழி - கடல். வீதல் - சாதல். திடம் - உறுதி. மரியாமை - சாவாமை. வழுத்தல் - கூறுதல்.